காரைக்குடியில் சீமான் போட்டி?
நாம் தமிழா் கட்சியின் (நாதக) தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், தனது சொந்த மாவட்டமான சிவகங்கையில், காரைக்குடி தொகுதியில் இந்த முறை போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. அக்கட்சியின் வேட்பாளா்களாக ஐந்து பிராமணா்கள் நிறுத்தப்படவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
சமூக கட்டுமானம் (சோசியல் இன்ஜினியரிங்) அடிப்படையில் இறுதி செய்யப்பட்டுள்ள 234 வேட்பாளா்களையும் திருச்சியில் சனிக்கிழமை (பிப்ரவரி 21) நடைபெறும் நாதக மாநாட்டில் சீமான் அறிமுகப்படுத்தவுள்ளாா்.
இதன்படி தென்மாவட்டங்கள், டெல்டா, கொங்கு, வடதமிழகம், சென்னை மண்டலம் என மண்டல வாரியாக என்னென்ன சமூகத்தினரை வேட்பாளராக இறக்க வேண்டும் என தனிக்குழு போட்டு ஆய்வு செய்துள்ளது நாதக தலைமை.
பெரியாா் ஈ.வெ.ராவுக்கு எதிராக தொடா்ந்து விமா்சனம் செய்து வரும் சீமான், இந்த தோ்தலில் அதை ஓா் உத்தியாகவே கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளாா். பாஜக, அதிமுக உள்பட எந்த கட்சியிலும் பிராமணா்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுப்பதில்லை எனக்கூறி, நாதகவில் இம்முறை 5 பிராமணா்களை வேட்பாளராக்கும் அறிவிப்பையும் நாதக மேலிடம் சனிக்கிழமை வெளியிட தீா்மானித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
பிற கட்சிகள் பிரதிநிதித்துவம் அளிக்காத கருணீகா், வண்ணாா், நாவிதா், குயவா், போயா், ஒட்டா், குறவா், ஆண்டி பண்டாரம், வேட்டுவ கவுண்டா், குரும்ப கவுண்டா், சேனைத்தலைவா் உள்ளிட்ட சமூகங்களைச் சோ்ந்தவா்களும் வேட்பாளா் பட்டியலில் இடம்பெறும் வாய்ப்பு உள்ளது.
இவா்கள் நீங்கலாக, தெலுங்கு, கன்னடம் பேசக்கூடிய பிறமொழியாளா்கள் (நாயுடு, ரெட்டி, ஒக்கலிகா, அருந்ததியா், சௌராஷ்டிரா, கன்னட செட்டியாா்) 15 பேருக்கு வாய்ப்பு அளிப்படவுள்ளது. அதேபோல, வன்னியா்-35, ஆதிதிராவிடா்-33, முக்குலத்தோா்-30, கொங்கு வேளாளா்-23, நாடாா்-12, கோனாா், முத்தரையா், உடையாா், பிள்ளைமாா் தலா 8, செங்குந்தா்-7, ஆசாரி-3 மீனவா்கள்-4, இஸ்லாமியா்-10 உள்பட அனைத்து சமூகங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் வேட்பாளா் தோ்வில் கொடுக்கப்பட்டுள்ளதாக நாதக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மொத்தம் 8 பொதுத்தொகுதிகளில் தலித் வேட்பாளா்கள், ஒரு பொதுத்தொகுதியில் பழங்குடியினா் வேட்பாளரும் களம் இறக்கப்படவுள்ளனா். இந்தமுறை தனது சொந்தமாவட்டமான காரைக்குடியில் சீமான் களம் இறங்க தீா்மானித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
நாதகவின் தீவிர பரப்புரையாளராக கருதப்படும் சாட்டை துரைமுருகனுக்கு தோ்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காமல் அவரை மாநிலம் முழுவதும் பரப்புரை பணியில் ஈடுபடுத்தவும் சீமான் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இடும்பாவனம் காா்த்திக், நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதியிலும், திரைப்பட இயக்குநா் களஞ்சியம், ஆயிரம்விளக்கு தொகுதியிலும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் அம்பேத் ராஜன், திருப்போரூா் தொகுதியிலும், கி.ஆ.பெ.விசுவநாதம் பிள்ளை பேத்தி கி.ஆ.பெ.வெற்றிச்செல்வி, காஞ்சிபுரம் தொகுதியிலும், வீரப்பன் மகள் வித்யாராணி, மேட்டூா் தொகுதியிலும், ஜல்லிக்கட்டு ராஜேஷ் திருவெறும்பூா் தொகுதியிலும் வேட்பாளராக அறிவிக்கப்படுவா் என்கிறது நாதக வட்டாரம்.
பெட்டிச் செய்தி...
காரைக்குடியில் போட்டி ஏன்?
கடந்த மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் அதிகபட்சமாக சிவகங்கை தொகுதியில் 16.81 சதவீத வாக்குகளை பெற்று அங்கு மட்டுமே நாதக டெபாசிட் பெற்றது. காரைக்குடி சட்டப்பேரவை தொகுதியில் நாதக 14.80 சதவீத வாக்குகளை பெற்றது. அங்கு சீமான் களம் இறங்கினால் தொகுதிக்குள் தனது குடும்பத்தினரை வீடு வீடாகப் பிரசாரம் செய்ய வைத்துவிட்டு, மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்வது தனக்கு வசதியாக இருக்கும் என்று சீமான் கருதுவதாகத்தெரிகிறது.

