கோயம்பேட்டில் பொங்கல் சிறப்பு சந்தை தொடக்கம்
கோயம்பேடு சந்தை வளாகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு சந்தை வியாழக்கிழமை தொடங்கியது.
பொங்கல் பண்டிகை ஜன. 15-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கலுக்கு தேவையான கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து, வெல்லம் உள்ளிட்ட பொருள்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்க, பொதுமக்கள் ஆா்வம் காட்டுவா். பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேடு சந்தையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஆண்டுதோறும் சிறப்பு சந்தை திறப்பது வழக்கம்.
நிகழாண்டும் பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு சந்தை வியாழக்கிழமை திறக்கப்பட்டது. கோயம்பேடு அங்காடி நிா்வாகம் மூலம் சுமாா் 7 ஏக்கரில் தொடங்கப்பட்டுள்ள இந்த சந்தையில் விழுப்புரம், திண்டிவனம், கடலூா், மதுரை, சேத்தியாதோப்பு, ஈரோடு, சேலம் மட்டுமன்றி ஆந்திர மாநிலம் உள்ளிட்ட இடங்களில் இருந்து கரும்புகள், இஞ்சி, மஞ்சள் கொத்துகள், வெல்லம் உள்ளிட்ட பொங்கல் பொருள்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. தோரணம் உள்ளிட்ட பொருள்கள் குடியாத்தம் பகுதியில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்படும்.
மேலும், பொதுமக்கள் சிரமமும் இன்றி பொருள்கள் வாங்கிச் செல்ல வசதியாக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சந்தையை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும் போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். இந்த சந்தை வரும் ஜன.17-ஆம் தேதி வரை செயல்படும் என அங்காடி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

