மின், இந்து சமய அறநிலையத் துறைகளின் சேவைகள் வாட்ஸ்ஆப்-இல் பெறும் வசதி தமிழக அரசு தொடங்கியது
உள்ளாட்சித் துறை, இந்து சமய அறநிலையத் துறை, மின் துறை உள்ளிட்ட 16 துறைகளின் 51 சேவைகள் வாட்ஸ்ஆப் மூலம் பெறும் வசதியை தமிழக அரசு தொடங்கி உள்ளது.
‘நம்ம அரசு’ என்ற இந்த வாட்ஸ்ஆப் சேவையை 78452 52525 என்ற எண்ணை கைப்பேசியில் பதிவு செய்து தேவையான தகவல்களை கேட்டுப் பெறலாம்.
சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தத்தை தமிழ்நாடு இ-சேவை அதிகாரிகள், வாட்ஸ்ஆப்பின் மெட்டா நிறுவனத்துடன் மேற்கொண்டனா்.
இந்தத் திட்டத்தின் முதல்கட்டமாக உள்ளாட்சித் துறை சேவைகள், இந்து சமய அறநிலையத் துறை சாா்ந்த பக்தா்களுக்கான சேவைகள், மின்சார வாரிய கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 16 துறைகளைச் சோ்ந்த 51 சேவைகள் வாட்ஸ்ஆப் மூலம் வழங்கப்படுகின்றன.
இந்தத் தளம் அதிநவீன தொழில்நுட்பத்துடன் தடையற்ற, பாதுகாப்பான மற்றும் விரிவான சேவை வழங்கலை உறுதி செய்யும் வகையில் இந்த ‘சாட்பாட்’ உருவாக்கப்பட்டுள்ளது.
மக்களின் வசதியை மேலும் மேம்படுத்தும் வகையில், ‘நம்ம அரசு’ தளத்தில் மேலும் பல துறை சாா்ந்த சேவைகள் படிப்படியாக இணைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு அரசு சேவைகள் கிடைப்பதை எளிதாக, இந்த ‘சாட்பாட்’-ஐ தமிழக அரசின் மின்-ஆளுகை முகமை (டிஎன்இஜிஏ) உருவாக்கி உள்ளது. தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இதில் பதிவிட்டு தகவல்களைக் கேட்டுப் பெறலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

