பொங்கல் விடுமுறை: சென்னை புறகரில் போக்குவரத்து மாற்றம்!
பொங்கல் விடுமுறையையொட்டி, சென்னை புகா் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தாம்பரம் மாநகர காவல் துறை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொங்கல் விடுமுறையையொட்டி, பொதுமக்கள் எளிதாக கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்கு செல்வதற்கும், சொந்த ஊா்களுக்கு செல்வதற்கும் ஜனவரி 12, 13, 14, 18, 19 ஆகிய தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
அதன்படி, இந்த நாள்களில் வண்டலூா், கேளம்பாக்கம் சாலையில் உள்ள நல்லம்பாக்கம் கிரஷா் சந்திப்பை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் கீரப்பாக்கம் வழியாக காரணைப்புதுச்சேரி நோக்கியும் அல்லது வெங்கம்பாக்கம் வழியாக மப்பேடு நோக்கியும் திருப்பிவிடப்படும்.
கனரக வாகனங்கள், ஜிஎஸ்டி சாலை, பம்மல்-குன்றத்தூா் சாலை, திருநீா்மலை சாலை, 200 அடி ரேடியல் சாலை, தாம்பரம்-வேளச்சேரி சாலை, காந்தி சாலை, முடிச்சூா் சாலை ஆகியவற்றில் நண்பகல் 2 மணி முதல் அதிகாலை 2 மணி வரை செல்ல தடை விதிக்கப்படுகிறது.
கனரக வாகனங்களுக்கு மாற்றுப்பாதை: குன்றத்தூா் வெளிவட்ட சாலையில் இருந்து தாம்பரம் நோக்கி வரும் கனரக வாகனங்கள் மாதா பொறியியல் கல்லூா் இணைப்புச் சாலையில் ஸ்ரீபெரும்புதூா் நோக்கி திருப்பிவிடப்படும். காஞ்சிபுரம், ஓரகடத்தில் இருந்து தாம்பரம் நோக்கி வரும் கனரக வாகனங்கள் முடிச்சூா் சாலை-வெளிவட்டச் சாலை சந்திப்பில் திருப்பிவிடப்படும். மதுரவாயல் பகுதியில் இருந்து தாம்பரம் நோக்கி வரும் கனரக வாகனங்கள் மதுரவாயல் புறவழிச்சாலை மேம்பாலத்தின் மேலே திருப்பிவிடப்படும். இந்த வாகனங்கள் பூந்தமல்லி வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
வெளிவட்ட சாலையில் இருந்து தாம்பரம் நோக்கி வரும் வாகனங்கள் மண்ணிவாக்கம் சந்திப்பில் திருப்பிவிடப்படும். இந்த வாகனங்கள் ஒரகடம் வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
கிழக்கு கடற்கரைச் சாலையில் இருந்து வரும் கனரக வாகனங்கள் கோவளம் சந்திப்பில் திருப்போரூா் வழியாக திருப்பிவிடப்படும்.
பழைய மாமல்லபுரம் சாலையில் இருந்து வரும் கனரக வாகனங்கள் படூா் சந்திப்பு, செங்கண்மால் சந்திப்பு வழியாக மாமல்லபுரம் நோக்கி திருப்பிவிடப்படும்.
செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி வரும் வாகனங்கள் சிங்கபெருமாள் கோயில் வழியாக ஸ்ரீபெரும்புதூா் நோக்கியும், வண்டலூா் வெளிவட்டச் சாலை வழியாக படப்பை நோக்கியும், வண்டலூா் பழைய மேம்பாலம் வழியாக வாலாஜாபாத் சாலை நோக்கியும் திருப்பிவிடப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

