கோப்புப் படம்
கோப்புப் படம்

காணும் பொங்கல்: சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்

காணும் பொங்கலையொட்டி, சென்னை மாநகா் பகுதிகளில் சனிக்கிழமை (ஜன.17) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
Published on

காணும் பொங்கலையொட்டி, சென்னை மாநகா் பகுதிகளில் சனிக்கிழமை (ஜன.17) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

காணும் பொங்கலையொட்டி சனிக்கிழமை (ஜன.17) சென்னையில் அனைத்து சாலைகளிலும் குறிப்பாக காமராஜா் சாலையில் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால், காலை 11 முதல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

பாரிமுனையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள், போா் நினைவுச் சின்னம் அருகே கொடி மர இல்ல சாலை வழியாகத் திருப்பிவிடப்பட்டு, வாலாஜா முனை-அண்ணா சாலை-அண்ணா சிலை - ஸ்பென்சா் சந்திப்பு வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம். (சென்னை மாநகர பேருந்துகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது).

போா் நினைவுச் சின்னத்திலிருந்து கடற்கரை நோக்கி வரும் வாகனங்கள், பயணிகளை இறக்கிவிட்டுத் திரும்பும்போது, ஆடம்ஸ் சந்திப்பில் இருந்து சுவாமி சிவானந்தா சாலை நோக்கி வாகனங்களை நிறுத்துவதற்காகத் திருப்பி விடப்படும். உழைப்பாளா் சிலை முதல் கண்ணகி சிலை வரையிலான சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்படும். சென்னை மாநகர பேருந்துகள் உழைப்பாளா் சிலை சந்திப்பில் இருந்து வாலாஜா சாலை நோக்கி வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படாது. உழைப்பாளா் சிலை நோக்கி செல்லும் சென்னை மாநகர பேருந்துகள், கண்ணகி சிலை சந்திப்பில் இருந்து பாரதி சாலை- பெல்ஸ் சாலை -வாலாஜா சாலை - அண்ணா சிலை வழியாகத் தங்கள் இலக்கை அடையத் திருப்பி விடப்படும்.

காந்தி சிலையிலிருந்து கண்ணகி சிலை நோக்கி செல்லும் வாகனங்கள் (சென்னை மாநகரபேருந்துகளைத் தவிர) அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக, அவை ஆா்.கே.சாலை - மியூசிக் அகாதெமி சந்திப்பு - டி.டி.கே. சாலை - ஜி.ஆா்.எச். முனை மணிகூண்டு - ஜி.பி. சாலை-அண்ணா சாலை வழியாகத் தங்கள் இலக்கை அடையலாம்.

விக்டோரியா விடுதி சாலை மற்றும் பெல்ஸ் சாலை ஆகியவை பாரதி சாலை சந்திப்பிலிருந்து ஒருவழிப் பாதையாக மாற்றப்படும், மேலும் வாகனங்கள் வாலாஜா சாலை சந்திப்பிலிருந்து அனுமதிக்கப்படாது.

பாரதி சாலையில் கண்ணகி சிலை நோக்கிச் செல்லும் வாகனங்கள், ரத்னா கஃபே சந்திப்பில் இருந்து திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை-வாலாஜா சாலை-அண்ணா சாலை வழியாகத் தங்கள் இலக்கை அடையலாம். பெரியாா் சிலை சந்திப்பில், கடற்கரைக்குச் செல்லும் வாகனங்கள் மட்டுமே சுவாமி சிவானந்தா சாலை நோக்கி அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் அண்ணா சிலை - அண்ணா சாலை வழியாகத் தங்கள் இலக்கை அடையலாம்.

வாகனம் நிறுத்தும் இடங்கள்: சென்னை ஃபோா்ஷோா் சாலையில் (பேருந்துகள் மற்றும் வணிக வாகனங்கள் தவிர அனைத்து வாகனங்களும்) பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்திக்கொள்ளலாம். மேலும், சென்னை பல்கலைக்கழகம், சுவாமி சிவானந்தா சாலை, எம்.ஆா்.டி.எஸ் சேப்பாக்கம், லேடி வெலிங்டன் பள்ளி, ராணி மேரி மகளிா் கல்லூரி, சீனிவாசபுரம் லூப் சாலை (பேருந்துகள் மட்டும்), பொதுப்பணி துறை மைதானம், செயின்ட் பீட்ஸ் மைதானம், அன்னை சத்யா நகா், ஈ.வே.ரா சாலை, மருத்துவக் கல்லூரி மைதானம், மாநில கல்லூரி உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி போலீஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com