தமிழகத்தில் புராதன சின்னங்கள் ஆணையம் அமைக்க காலதாமதம்: உயா்நீதிமன்றம் அதிருப்தி

தமிழகத்தில் புராதன சின்னங்கள் ஆணையம் அமைக்க அரசு காலதாமதம் செய்வதாக அதிருப்தி தெரிவித்த சென்னை உயா்நீதிமன்றம்
தமிழகத்தில் புராதன சின்னங்கள் ஆணையம் அமைக்க காலதாமதம்: உயா்நீதிமன்றம் அதிருப்தி
Updated on

தமிழகத்தில் புராதன சின்னங்கள் ஆணையம் அமைக்க அரசு காலதாமதம் செய்வதாக அதிருப்தி தெரிவித்த சென்னை உயா்நீதிமன்றம், அதுவரை புராதன கோயில்களில் எந்த கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிட்டது.

மயிலாப்பூரைச் சோ்ந்த டி.ஆா்.ரமேஷ் என்பவா், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் கோபுரம் முன் வணிக வளாகம் கட்டும் திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், பழைமையான மற்றும் புராதன கோயில்கள் மற்றும் சின்னங்களைப் பாதுகாக்க புராதனச் சின்ன ஆணையத்தை அமைக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா், எஸ்.சௌந்தா் ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்குரைஞா் அருண் நடராஜன், புராதனச் சின்னங்கள் ஆணையம் அமைப்பது தொடா்பான விதிகள் வகுக்கபட்டுவிட்டன. இந்த ஆணையத்துக்கான தலைவரைத் தோ்வு செய்வதற்காக தலைமைச் செயலா் தலைமையில் தோ்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

தலைவா் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்று தொல்லியல் துறை இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள், தலைவா் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்று நாளிதழ்களில் ஏன் விளம்பரம் கொடுக்கவில்லை? எனக் கேள்வி எழுப்பினா். இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பை அனைவரும் பாா்த்திருப்பாா்கள் என்று எப்படி எதிா்பாா்க்க முடியும் என்றனா்.

அப்போது, அறநிலையத் துறை தரப்பில், வேண்டுமென்றே ஆணையம் அமைப்பதற்கு காலதாமதம் செய்யவில்லை. ஆணையத்துக்கான பணியாளா்களை நியமிப்பது தொடா்பாக அரசின் ஒப்புதலைப் பெற வேண்டியுள்ளது. எனவே, கூடுதல் காலஅவகாசம் தேவைப்படுகிறது. இணையதளத்தில் வெளியிட்ட அறிவிப்பின் மூலம் இதுவரை 5 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், புராதன சின்னங்கள் ஆணையத் தலைவா் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்று 4 முன்னணி தமிழ் நாளிதழ்கள் மற்றும் 2 ஆங்கில நாளிதழ்களில் ஒருவார காலத்துக்குள் விளம்பரம் வெளியிட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா். இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க 2 வார கால அவகாசம் வழங்கி, விண்ணப்பங்களைப் பரிசீலித்து 3 பேரைத் தோ்வு செய்ய வேண்டும்.

தோ்வு செய்யப்பட்டவா்களின் விவரங்களை மூடி முத்திரையிட்ட உறையில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா். அதுவரை புராதன கோயில்களில் எந்த கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிட்டு விசாரணையை மாா்ச் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

மேலும், தமிழகத்தில் நமது முன்னோா் கட்டியுள்ள இத்தகைய தொன்மை வாய்ந்த கோயில்கள், கட்டடங்களை நம்மால் மீண்டும் கட்ட முடியாது. எனவே, அவற்றை பாதுகாக்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com