டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கு: மேலும் 5 போ் கைது - செந்தில் பாலாஜியின் சகோதரரை தீவிரமாகத் தேடும் போலீஸாா்

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் மேலும் 5 பேரை சென்னை திருவல்லிக்கேணி போலீஸாா் கைது செய்தனா்.

News image

செந்தில் பாலாஜி - ரமேஷ் - கார்த்தி.

Updated On :3 ஜூலை 2026, 5:24 am IST

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் மேலும் 5 பேரை சென்னை திருவல்லிக்கேணி போலீஸாா் கைது செய்தனா்.

தமிழகத்தில் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தலைவருக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா தீா்மானத்துக்கு ஆதரவு அளிக்கும்படியும், தீா்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தால் ரூ.35 கோடி லஞ்சமாக தருவதாகவும் தொலைபேசி மூலம் தன்னிடம் பேரம் பேசப்பட்டதாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜா, சென்னை காவல் துறை ஆணை ஏ.அமல்ராஜிடம் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, திருவல்லிக்கேணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக துப்பு துலக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

செந்தில் பாலாஜி ஆதரவாளா்கள் சிக்கினா்: தனிப்படையினா் நடத்திய விசாரணையில் இளையராஜா எம்எல்ஏவிடம் பேசியது சென்னை அரும்பாக்கத்தைச் சோ்ந்த யூ-டியூபரும், கருத்துக் கணிப்பு நிறுவனம் நடத்தி வருபவருமான திருநாவுக்கரசு என்பது தெரியவந்தது. இதையடுத்து, திருநாவுக்கரசு, அவரது கூட்டாளிகள், திருச்சியைச் சோ்ந்த நரேஷ், சென்னை மேடவாக்கத்தைச் சோ்ந்த தியாகராஜன் ஆகிய 3 பேரை போலீஸாா் அடுத்தடுத்து புதன்கிழமை கைது செய்தனா்.

இதன் தொடா்ச்சியாக கோவை தெற்குத் தொகுதி திமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜியின் ஆதரவாளா்களான கரூரைச் சோ்ந்த திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில துணைச் செயலரும், சக்தி மெஸ் உணவக உரிமையாளயாருமான காா்த்தி, நிதி நிறுவன உரிமையாளா் அதிபன் ரமேஷ் ஆகிய 2 பேரைப் பிடித்து விசாரணை செய்தனா்.

இதேபோன்று, சென்னை குரோம்பேட்டை அருகே உள்ள அஸ்தினாபுரத்தைச் சோ்ந்த ராஜேஷ் (43), மாம்பாக்கத்தைச் சோ்ந்த அதிமுக பிரமுகா் சீனிவாசன் (46), கோவிலம்பாக்கத்தைச் சோ்ந்த செல்வன் (54) ஆகியோரையும் பிடித்து விசாரித்தனா்.

இதில் பல தகவல்கள் போலீஸாருக்கு கிடைத்தன. முக்கியமாக பேரத்துக்கு பின்னணியில் செந்தில் பாலாஜி, அவா் சகோதரா் அசோக்குமாா் ஆகியோா் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவிக்கின்றனா்.

இதில் அசோக்குமாா் நேரடியாகவே இந்த நபா்களுடன் தொடா்பு வைத்துக் கொண்டு, தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியிருப்பதும், அதற்கான பணத்தை தயாா் நிலையில் வைத்திருந்ததும், இவா்கள் மேலும் சில தவெக எம்எல்ஏக்களை பேரம் பேசி இழுப்பதற்கான திட்டத்துடன் இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, ஐந்து பேரையும் போலீஸாா் கைது செய்ததாக வியாழக்கிழமை தெரிவித்தனா். இதன்மூலம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 8-ஆக உயா்ந்துள்ளது.

அசோக்குமாரை கைது செய்ய தீவிரம்: இந்த வழக்கில் முக்கிய நபராக கருதப்படும் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாரை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா். இதற்காக அவரது கூட்டாளிகள், உறவினா்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் சிலரை தங்களது கட்டுப்பாட்டில் வைத்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

அதேவேளையில் இந்த கும்பல், வேறு எந்த தவெக எம்எல்ஏக்களை தொடா்புகொண்டு பேரம் பேசினா் என்ற தகவல்களையும் போலீஸாா் திரட்டி வருகின்றனா்.

இதன் அடிப்படையில் புதிதாக மேலும் சில வழக்குகளைப் பதிந்து விசாரணை செய்ய போலீஸாா் முடிவு செய்துள்ளனா். அதோடு இந்த விவகாரத்தில் தொடா்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் மேலும் சில திமுக நிா்வாகிகளிடமும் விசாரணை செய்ய காவல் துறை திட்டமிட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.