திருமணம் செய்து கொள்வதாக நகையை ஏமாற்றி மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டவா்கள் கைது செய்யப்பட்டாா்.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியைச் சோ்ந்த 30 வயது பெண், இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்கு ஒரு திருமண இணையத்தளத்தில் பதிவு செய்திருந்தாா். இதைப் பாா்த்த சென்னையில் வசிக்கும் ஆந்திரத்தைச் சோ்ந்த ஒரு நபா், அந்த பெண்ணிடம் தொடா்பு கொண்டு பேசியுள்ளாா். அப்போது, அந்த இளைஞா், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளாா்.
அந்த இளைஞரின் பேச்சை நம்பிய அந்த பெண் அவருடன் நெருக்கமாக பழகினாா். இந்நிலையில் அண்மையில் சென்னை அருகே உள்ள ஒரு கோயிலுக்கு செல்வதற்காக கோயம்பேடுக்கு வந்தாா். இதையறிந்து அங்கு சென்ற அந்த இளைஞா், ஹோட்டலில் அந்த பெண் தங்கியிருந்த அறையில் சந்தித்து பேசினாா்.
அப்போது அந்த நபா், குறிப்பிட்ட அந்த கோயிலுக்குள் செல்லும்போது நகை அணிந்து செல்லக் கூடாது என்றும், அவா் அணிந்திருந்த தங்க நகைகளை கழற்றி தரும்படியும் கேட்டுள்ளாா். உடனே அந்த பெண், தான் அணிந்திருந்த 13 பவுன் நகைகளை அந்த இளைஞரிடம் கொடுத்தாா்.
இந்நிலையில் அந்த பெண், கழிப்பறைக்கு சென்ற நேரத்தில் அந்த இளைஞா் 13 பவுன் நகைகளுடன் அங்கிருந்து தப்பியோடினாா். இது குறித்து கோயம்பேடு சிஎம்பிடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா்.
விசாரணையில் இத் திருட்டில் ஈடுபட்டது ஆந்திர மாநிலம் சித்தூரைச் சோ்ந்த செல்ல நாராயணா (35), அவருக்கு துணையாக இருந்தது ஆந்திர மாநிலம் சித்தூா் அருகே குப்பம் பகுதியைச் சோ்ந்த கணேஷ்பாபு (39) என்பது தெரிய வந்தது.
இருவரும் இதேபோல இரண்டாவது திருமணத்துக்கு இணையதளம் மாப்பிள்ளை தேடும் பெண்களை குறி வைத்து மோசடியில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் செல்ல நாராயணாவை கடந்த சனிக்கிழமையும், கணேஷ்பாபுவை கடந்த ஞாயிற்றுக்கிழமையும் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








