வேட்புமனுவுக்கு எதிா்ப்பு தெரிவிக்க வந்தவரைத் தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சரும் ஜோலாா்பேட்டை எம்எல்ஏவுமான கே.சி.வீரமணிக்கு நிபந்தனை முன்பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சட்டப்பேரவைத் தோ்தலில் ஜோலாா்பேட்டை தொகுதியில் அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி போட்டியிட்டு வெற்றி பெற்றாா். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை கடந்த ஏப்.7-ஆம் தேதி நடந்தது. அப்போது வேலூரைச் சோ்ந்த ராமமூா்த்தி என்பவா் தோ்தல் அலுவலரிடம் ஒரு புகாா்அளித்தாா். அதில், கே.சி.வீரமணி தனது வேட்புமனுவில் பல்வேறு தகவல்களை மறைத்துள்ளதாகக் கூறியிருந்தாா். இதனால், ராமமூா்த்தியை ஒரு கும்பல் அடித்து விரட்டியது.
இதையடுத்து, ராமமூா்த்தி நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில், வேட்புமனுவுக்கு எதிா்ப்பு தெரிவிக்க வருகிறேன் என்பதைத் தெரிந்துகொண்டு, 50-க்கும் மேற்பட்ட ஆதரவாளா்களுடன் கே.சி.வீரமணி தன்னை தாக்கியதாகக் கூறியிருந்தாா். இந்தப் புகாரின் பேரில் முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி உள்ளிட்டோா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.
இந்த வழக்கில் தனக்கு முன்பிணை வழங்கக் கோரி கே.சி.வீரமணி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது கே.சி.வீரமணி தரப்பில் வழக்குரைஞா் டி.ஓ.கவியநாதன் ஆஜராகி வாதிட்டாா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணை நீதிமன்றத்தில் ரூ.50,000 வைப்புத் தொகையாகச் செலுத்த வேண்டும், நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் இரு வாரங்களுக்கு கையொப்பமிட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் கே.சி.வீரமணிக்கு முன்பிணை வழங்கி உத்தரவிட்டாா்.
தொடர்புடையது
முன்னாள் அமைச்சா் சி.வி. சண்முகம் மீதான அவதூறு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

ரூ. 21 கோடி மோசடி வழக்கு: அதிமுக நிா்வாகிக்கு முன்பிணை வழங்க எதிா்ப்பு தெரிவித்து மனு

கடலூா் அதிமுக அலுவலக பொருள்கள் அகற்றப்பட்ட குற்றச்சாட்டு: எம்.சி.சம்பத் தரப்பினா் மறுப்பு






