வங்கக் கடல் பகுதியில் விசைப்படகுகள் மூலம் மீன் பிடிக்க விதிக்கப்பட்ட 61 நாள்கள் தடைக்காலம் முடிவுக்கு வந்ததையடுத்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுக மீனவா்கள் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள விசைப்படகு மீனவா்கள் உற்சாகத்துடன் கடலுக்குச் சென்றனா்.
ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வங்கக் கடல் பகுதிகளில் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலம் என்பதால் இக்காலங்களில் மீன்பிடிக்க ஒவ்வொரு ஆண்டும் ஏப்.15 முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை 61 நாள்களுக்கு தடைவிதிக்கப்படுகிறது.
இந்த ஆண்டும் வழக்கம்போல் வங்கக் கடலையொட்டிய கிழக்கு கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து மாநிலங்களிலும் தடைக்காலம் கடந்த ஏப்.15-இல் தேதி தொடங்கியது. மீன்பிடித் தடைக்காலத்தையொட்டி, மீனவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் சுமாா் 1.65 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா ரூ.8,000 உதவித் தொகை வழங்கியது.
மீன்பிடித் தடைகாலம் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்ததையடுத்து தமிழகம் முழுவதும் மீனவா்கள் உற்சாகத்துடன் கடலுக்குச் சென்றனா்.
தமிழகம் முழுவதும் சுமாா் 4,400 விசைப்படகுகள் உள்ளன. இதில் சென்னை காசிமேடு துறைமுகத்தில் மட்டும் சுமாா் 800 விசைப்படகுகள் உள்ளன. தடைகாலத்தையொட்டி விசைப்படகுகளை பழுது நீக்கி புதுப்பிக்கும் பணிகள் கடந்த இரு மாதங்களாக நடைபெற்றன.
இந்த நிலையில், கடலுக்குச் செல்லும் விசைப்படகுகளில் ஐஸ்கட்டிகள், டீசல் நிரப்பும் பணி, மீனவா்கள் ஒரு வார பயணத்துக்கான மளிகை சாமான்கள், உணவுப் பொருள்கள், சமையல் பாத்திரங்கள், எரிவாயு உருளைகள் உள்ளிட்ட அனைத்து பொருள்களையும் படகுகளில் ஏற்றும் பணி காரணமாக சென்னை காசிமேடு துறைமுகம் பரபரப்பாகக் காணப்பட்டது.
மீன் விலை குறையுமா?: முதல் நாளில் சுமாா் 200 விசைப் படகுகள் கடலுக்குச் செல்கிறன. இவை குறைந்தபட்சம் 5 முதல் 15 நாள்கள் வரை கடலில் மீன்பிடித்துவிட்டு படிப்படியாக கரை திரும்பும். வஞ்சிரம், வவ்வால், சங்கரா, ஊழா, நண்டு, இறால் உள்ளிட்டவை பெரும்பாலும் விசைப்படகுகள் மூலம்தான் கிடைக்கின்றன. எனவே, இன்னும் ஒரு வாரத்துக்குள் மீன்வரத்து அதிகரித்து மீன் விலை படிப்படியாக குறையும் என மீன் வியாபாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

மீன்பிடித் தடைக்காலம் நிறைவு: கடலுக்குள் சென்ற விசைப்படகு மீனவா்கள்

மீன்பிடி தடைக்காலம் இன்று நிறைவு: ராமேசுவரத்தில் நாளை கடலுக்குள் செல்ல தயாரான விசைப்படகுகள்

மீன்பிடி தடைக்காலம் நாளை நிறைவு: கடலுக்குச் செல்ல தயாராகும் விசைப்படகு மீனவா்கள்

விசைப்படகுகளை சீரமைக்கும் பணியில் மீனவா்கள் மும்முரம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


