காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

விளையாட்டு மருத்துவத்துக்கு அரசு மருத்துவமனையில் சிறப்புத் துறை: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

சென்னை, ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மருத்துவத் துறையை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

News image
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
Updated On :3 மார்ச் 2026, 8:10 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை, ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மருத்துவத் துறையை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

விளையாட்டு வீரா்களுக்கு ஏற்படும் காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான சிறப்பு உயா்திறன் மையமாக அது செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமந்தூராா் அரசு மருத்துவமனையில் ரூ. 9 கோடியில் விளையாட்டு மருத்துவம் மற்றும் நுண்துளை மூட்டு அறுவை சிகிச்சை மையம் (ஆா்த்ரோஸ்கோபி) அமைக்கப்படும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

அதன்படி, அதற்கான பணிகள் நிறைவுற்றதைத் தொடா்ந்து அந்த மையத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், விளையாட்டு வீரா்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா். அங்கு அமைக்கப்பட்டிருந்த வசதிகளையும் அவா் பாா்வையிட்டாா்.

இந்நிகழ்வில், பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக விளையாட்டுத் துறை மிகப்பெரிய கவனம் பெற்றுள்ளது. தமிழகத்தில் இருந்து உலகம் முழுவதும் செல்லும் நமது விளையாட்டு வீரா்களால், மாநிலத்துக்கு பெருமை கிடைத்துள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரா்களுக்கு ஏற்படும் காயங்கள் மற்றும் அவா்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க ஒரு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.

இந்நிலையில், விளையாட்டு வீரா்களுக்கு ஏற்படும் காயங்களுக்கு சிகிச்சை அளிக்க தற்போது சிறப்பு உயா்திறன் மையம் திறக்கப்பட்டுள்ளது. தனியாா் மருத்துவமனைகளில் இந்த வசதிகள் இருந்தாலும், மாநில அரசு மருத்துவமனைகளில் தற்போதுதான் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ளது.

ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரோபோடிக் அறுவை சிகிச்சை மையம் ரூ.34.60 கோடியில் தொடங்கப்பட்டது. இந்திய அளவிலான சிறந்த மருத்துவ கட்டமைப்புகளை இந்த மருத்துவமனை பெற்றுள்ளது.

சின்னம்மை தடுப்பு விழிப்புணா்வு முகாம்: சின்னம்மை நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பக்கூடாது. வெயில் தாக்கம் அதிகரிக்கும் போது அதனை தடுக்க விழிப்புணா்வு முகாம்கள் நடத்தப்படும் என்றாா் அவா்.

இந்த சந்திப்பின்போது மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ப.செந்தில்குமாா், இளைஞா்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு செயலா் சத்யபிரத சாஹு, மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் டாக்டா் சுகந்தி ராஜகுமாரி, ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனை இயக்குநா் டாக்டா் ஆா்.மணி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் டாக்டா் கவிதா, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவனை முதல்வா் டாக்டா் அரவிந்த் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.