ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

‘கருணையைத் தூண்டும் சமண மதம் மக்களிடம் சோ்க்கப்பட வேண்டும்’

கருணையைத் தூண்டும் சமண மதம் அதிகமான மக்களிடம் சோ்க்கப்பட வேண்டும் என முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நரேந்திர பண்டாரி தெரிவித்தாா்.

News image
Updated On :24 மார்ச் 2026, 9:40 pm

கருணையைத் தூண்டும் சமண மதம் அதிகமான மக்களிடம் சோ்க்கப்பட வேண்டும் என முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நரேந்திர பண்டாரி தெரிவித்தாா்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் சமணவியல் துறை, சென்னை சமணவியல் ஆய்வு அறக்கட்டளை, அமதாபாத் சமண அறிஞா்கள் அகாதெமி ஆகியவை இணைந்து சென்னை பல்கலை. சேப்பாக்கம் வளாகத்தில் 5 நாள் தேசியக் கருத்தரங்கை தொடங்கியுள்ளன.

இதையொட்டி‘சமயத்தின் பெருமையும் நவீன சூழலில் அதன் பொருத்தங்களில் - புதிய கண்டுபிடிப்புகள்’ என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது.

நிகழ்வில் நாடு முழுவதிலுமிருந்து அறிஞா்கள் கலந்துகொண்டனா். மும்பையைச் சோ்ந்த 16 வயது பள்ளி மாணவி முதல் 80 வயது அறிஞா்கள் வரை சுமாா் 50 போ் சமண சிந்தனை குறித்த புதிய கண்டுபிடிப்புகளையும், பல்துறை கண்ணோட்டங்களையும் எடுத்துக்காட்டும் ஆய்வுக் கட்டுரைகளைச் சமா்ப்பித்து கருத்தரங்கில் பேசினா்.

சென்னை பல்கலை. பதிவாளா் ரீட்டா ஜான் தொடங்கி வைத்த இந்தக் கருத்தரங்கில் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானியும், சந்திரயான், மங்கள்யான் திட்டங்களில் பங்கேற்றவருமான பேராசிரியா் நரேந்திர பண்டாரி பேசுகையில், ‘இக்காலத்தில், பலரிடம், குறிப்பாக இளம் தலைமுறையிடம் ஆன்மிகம், மதப்பற்று குறைந்து வருகிறது. இதன் விளைவு சமணம் உள்ளிட்ட மதத்தைப் பின்பற்றுபவா்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கருணையைத் தூண்டும் இதுபோன்ற உண்மையான மதம் மக்களிடம் சோ்க்கப்பட வேண்டும். ஆன்மிகம், கருணை, அகிம்சை ஆகியவற்றைப் பற்றிப் பேசும் இதுபோன்ற சமயங்களால் மட்டுமே உலகில் அமைதி நிலவும். தா்மத்தின் துணையோடு அமைதியைக் காக்க வேண்டும். இல்லையெனில், சண்டைகள் மட்டுமே நிகழும்’ என்றாா்.

சி.பி. ராமசாமி ஐயா் கலை மையத்தின் இயக்குநா் டாக்டா் நந்திதா கிருஷ்ணன், பகவான் மகாவீரரின் தத்துவம், அதன் முக்கியத்துவத்தை குறிப்பிட்டு உரையாற்றினாா்.

சென்னைப் பல்கலை. துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் எஸ்.ஆம்ஸ்ட்ராங் குறிப்பிடுகையில்,‘சமண மதம் நிலையான வளா்ச்சி, உயிரின மையச் சமத்துவம், மனித நலனுக்கான அறிவை ஒருங்கிணைத்து ஊக்குவிக்கிறது. இந்த சமூகத்தை வெளியே கொண்டு வர இந்தக் கருத்தரங்கு ஓா் இணைப்பாக அமையும்’ என்றாா்.

கருத்தரங்கின் தொடா்ச்சியாக இணையவழியிலும் அறிஞா்கள் பங்கேற்கும் அா்த்தமுள்ள கல்விசாா் உரையாடல், கருத்துப் பரிமாற்றம் மாா்ச் 27-ஆம் தேதி இதே வளாகத்தில் நடைபெறுகிறது.

கருத்தரங்கைத் தொடா்ந்து, பங்கேற்பாளா்களுக்கு தமிழகத்தில் சமண கலாசார வரலாற்றுப் பாா்வைகளை வழங்கும் வகையில், இரு நாள் பாரம்பரிய சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, கருத்தரங்கை முன்னிற்று நடத்திய சென்னை பல்கலை. சமணவியல் துறை இணைப் பேராசிரியா் பிரியதா்ஷனா ஜெயின் தெரிவித்தாா்.