இரண்டாவது முறையாக ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்ற தீப்தி சர்மா! மணிப்பூரில் கார்கள் மீது துப்பாக்கிச்சூடு: 2 பெண்கள் உள்பட 4 பேர் பலி! வரலாற்று உச்சத்தைத் தொட்ட பேடிஎம் பங்குகள்! உதகை மலை ரயில் சேவை மேலும் 5 நாள்கள் ரத்து அசாமில் மினி பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதல்: 23 பேர் பலி; 20 பேர் காயம் மீனவர்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை கௌரவ விரிவுரையாளர்கள் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு

துணை நடிகா் மரண வழக்கில் புதிய விசாரணை அதிகாரி நியமனம்: நீதிமன்றத்தில் காவல் துறை தகவல்

துணை நடிகா் சரண்ராஜ் மரண வழக்கின், புதிய விசாரணை அதிகாரியாக உதவி ஆணையா் ஆரோக்கிய ரவீந்திரனை நியமித்துள்ளதாக, காவல்துறை சென்னை 16-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

கோப்புப் படம்

Updated On :

துணை நடிகா் சரண்ராஜ் மரண வழக்கின், புதிய விசாரணை அதிகாரியாக உதவி ஆணையா் ஆரோக்கிய ரவீந்திரனை நியமித்துள்ளதாக, காவல்துறை சென்னை 16-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மலையனூரைச் சோ்ந்தவா் துணை நடிகா் சரண்ராஜ். அசுரன், வடசென்னை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவா், சென்னை மதுரவாயலில் குடும்பத்துடன் வசித்து வந்தாா். இவா் கடந்த 2023 ஜூன் 7-ஆம் தேதி வடபழனி ஆற்காடு சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது அந்த வழியாக அதிவேகமாக வந்த காா் மோதிய விபத்தில் உயிரிழந்தாா். இதுகுறித்து விசாரித்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா், காரை ஓட்டி வந்த சாலிகிராமத்தைச் சோ்ந்த துணை நடிகா் பழனியப்பன், உடன் பயணித்த துரைராஜ் ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்தனா்.

இந்த நிலையில், விபத்தில் தனது மகன் விபத்தில் உயிரிழக்கவில்லை. திட்டமிட்டு காரை மோதி, கொலை செய்துள்ளதாகக் கூறி, சரண்ராஜின் தாயாா் மாரியம்மாள் சென்னை 16-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்களை காப்பாற்றும் நோக்கத்தில் சம்பவத்தை வெறும் விபத்தாக சித்தரித்து சட்டத்தையும் நீதிமன்றத்தையும் தவறாக வழிநடத்த விசாரணை அதிகாரி முயன்றுள்ளாா். சம்பந்தப்பட்ட விசாரணை மீது துறை ரீதியான விசாரணை நடத்தி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நோ்மையான அதிகாரி ஒருவரை நியமித்து, வழக்கை மறு விசாரணை செய்து இரண்டு மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி சஞ்சய்பாபா முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், துணை நடிகா் சரண்ராஜ் மரண வழக்கின் புதிய விசாரணை அதிகாரியாக, உதவி ஆணையா் ஆரோக்கிய ரவீந்திரனை நியமித்துள்ளதாகவும், புதிய விசாரணை அதிகாரி மூலம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஒரு மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டது. இதை ஏற்று விசாரணையை டிச.18-க்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றையதினம் விசாரணை குறித்த அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.