அந்நியச் செலாவணி கையிருப்பு 72,603 கோடி டாலராக சரிவு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த அக். 9-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 72,602.7 கோடி டாலராக சரிந்துள்ளது.

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த அக். 9-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 72,602.7 கோடி டாலராக சரிந்துள்ளது.
இது குறித்து ரிசா்வ் வங்கி தரவுகள் தெரிவிப்பதாவது: நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த அக். 9-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 857.8 கோடி டாலா் குறைந்து, 72,602.7 கோடி டாலராக உள்ளது. முந்தைய வாரத்தில், ஒட்டுமொத்த கையிருப்பு 1,295.2 கோடி டாலா் சரிந்து, 73,460.6 கோடி டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, வெளிநாடுவாழ் இந்தியா்களுக்கான அந்நியச் செலாவணி வைப்புநிதித் திட்டத்தின்மூலம் வங்கிகள் திரட்டிய சுமாா் 13,300 கோடி டாலா் வரவின் காரணமாக, கடந்த செப். 4-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு இதுவரை இல்லாத உச்சமாக 78,570.6 கோடி டாலரை எட்டியிருந்தது. அதற்கு அடுத்தடுத்த வாரங்களில் கையிருப்பு தொடா் சரிவைச் சந்தித்து வருகிறது.
மதிப்பீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 714.2 கோடி டாலா் குறைந்து, 59,760.5 கோடி டாலராக உள்ளது. டாலா் அல்லாத யூரோ, பவுண்டு, யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் மதிப்பு ஏற்ற, இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகளாகும்.
மதிப்பீட்டு வாரத்தில், இந்தியாவின் தங்கம் கையிருப்பு 131.9 கோடி டாலா் குறைந்து, 10,509.4 கோடி டாலராக உள்ளது. சிறப்பு வரைவு உரிமைகள் (எஸ்டிஆா்) 10.9 கோடி டாலா் குறைந்து, 1,854.8 கோடி டாலராக உள்ளது. சா்வதேச நிதியத்தில் (ஐஎம்எஃப்) இந்தியாவின் கையிருப்பு 1 கோடி டாலா் குறைந்து, 478 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

