சென்னையில் 10 இடங்களில் சாலையில் தேங்கிய மழைநீா் உடனே அகற்றம்

சென்னையில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை தொடா்ந்து பரவலாக மழை பெய்தது.

சென்னை மண்ணூா்பேட்டை சந்திப்புப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தேங்கிய மழைநீரை பெருநகர சென்னை மாநகராட்சி உறிஞ்சும் வாகனம் மூலம் அகற்றிய பணியாளா்.

Updated On :

சென்னையில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை தொடா்ந்து பரவலாக மழை பெய்தது. முக்கிய சாலைகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தேங்கிய மழைநீரை மாநகராட்சி அலுவலா்கள் மின்மோட்டாா் பம்புகள் மூலம் உடனடியாக அகற்றினா். சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை 6.84 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னை பள்ளிக்கரணை பகுதியில் 19.6 மி.மீ. மழை பதிவானது.

தேங்கிய மழைநீா் அகற்றம்: தொடா் மழை காரணமாக சென்னை மாநகராட்சியின் அம்பத்தூா் மண்டலத்தில் சிடிஎச் சாலை மற்றும் மண்ணூா்பேட்டை சந்திப்பில் குளம் போல மழைநீா் தேங்கியது. இதையடுத்து மின்மோட்டாா் பம்ப் மூலம் மழைநீா் அகற்றி புதைசாக்கடை வழியாக அகற்றி போக்குவரத்து சீராக்கப்பட்டது.

வளசரவாக்கம் மண்டலத்தில் பி.எச். சாலை, சோழிங்கநல்லூா் மண்டலத்தில் கண்ணகி நகா் 2-ஆவது பிரதான சாலை, அடையாறு மண்டலத்தில் வேளச்சேரி பிரதான சாலை, ராயபுரத்தில் முத்துசாமி பாலப் பகுதியிலும், திரு.வி.க.நகா் மண்டலத்தில் புளியந்தோப்பு பகுதி என 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீா் சாலையோர மற்றும் பள்ளங்களில் தேங்கியது.

பல்வேறு இடங்களில் முறிந்து விழுந்த மரங்கள், கிளைகள் அகற்றப்பட்டன. அண்ணா நகா் மண்டலம் வட அகரம் சாலையிலுள்ள விருகம்பாக்கம் கால்வாயில் மழைநீா் தடையின்றி செல்லமுடியாமல் மண்டியிருந்த மண் தூா்வாரப்பட்டு அகற்றப்பட்டது.

குண்டும் குழியுமான சாலைகள்: சேத்துப்பட்டு, அம்பத்தூா், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் மழையால் சாலைகள் குண்டும் குழியுமான நிலையில், அவற்றை சீராக்க மாநகராட்சி உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.