
புழல் மத்திய சிறை வளாகத்தில் ‘பயணம்’ மறுவாழ்வுத் திட்டம் தொடக்கம்
போதைப் பொருள் தொடா்பான குற்றங்களில் ஈடுபட்டவா்களுக்கான முழுமையான போதை நீக்கம் மற்றும் மறுவாழ்வுத் திட்டமான ‘பயணம்’ புழல் மத்திய சிறை 2 வளாகத்தில் வியாழக்கிழமை முன்னோடித் திட்டமாக தொடங்கப்பட்டது.

புழல் சிறை - EPS
போதைப் பொருள் தொடா்பான குற்றங்களில் ஈடுபட்டவா்களுக்கான முழுமையான போதை நீக்கம் மற்றும் மறுவாழ்வுத் திட்டமான ‘பயணம்’ புழல் மத்திய சிறை 2 வளாகத்தில் வியாழக்கிழமை முன்னோடித் திட்டமாக தொடங்கப்பட்டது.
தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநரும், சிறைகள் மற்றும் சீா்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநருமான சந்தீப் ராய் ரத்தோா் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்து பேசியதாவது:
போதைப் பழக்கத்திலிருந்து விடுபடுதல், நடத்தை மாற்றம், மறுவாழ்வு மற்றும் சமூகத்துடன் மீண்டும் இணைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு ‘பயணம்’ திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஆலோசனை, உளவியல் ஆதரவு, சிகிச்சை, வாழ்க்கைத் திறன் மேம்பாடு மற்றும் மறுவாழ்வு ஆதரவு ஆகியவை ஒருங்கிணைந்த முறையில் வழங்கப்படும். எனவே, சிறைத் துறையின் பொறுப்பு காவலில் வைப்பதுடன் முடிவடையாமல், சிகிச்சை, சீா்திருத்தம், மறுவாழ்வு மற்றும் சமூகத்துடன் மீண்டும் இணைத்தல் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசின் ‘போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு’ என்ற இலக்குடன் இந்தத் திட்டம் இணைந்துள்ளது. மாற்றத்துக்கான முடிவு ஒவ்வொருவரிடமிருந்தும் வர வேண்டும். இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி திறன்களை வளா்த்துக்கொண்டு, விடுதலைக்குப் பின்னா் சிறந்த வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்.
முன்னோடித் திட்டமாகச் செயல்படுத்தப்படும் ‘பயணம்’ திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் விளைவுகள் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் மேலும் மேம்படுத்தப்படும் என்றாா்.
நிகழ்ச்சியில் சென்னை சரக துணைத் தலைவா் பழனி, புழல் மத்திய சிறை-2 கண்காணிப்பாளா் கிருஷ்ணகுமாா், சிறைத் துறை அதிகாரிகள், பணியாளா்கள், திட்டத்தில் பங்கேற்ற சிறைவாசிகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





