இடிந்து விழும் நிலையில் நகராட்சி வணிக வளாகம்

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள நகராட்சி வணிக வளாகத்தைச்
இடிந்து விழும் நிலையில் நகராட்சி வணிக வளாகம்
Updated on
2 min read

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள நகராட்சி வணிக வளாகத்தைச் சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
 செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே மேட்டுத் தெருவில் நகராட்சி சார்பில் கடந்த 1984-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் வணிக வளாகம் ஏற்படுத்தப்பட்டது.
 இங்கு ஒரு பகுதியில் 22 கடைகளும், மற்றொரு பகுதியில் 9 கடைகளும் உள்ளன.
 இந்த வளாகத்தில் காய்கறி கடைகளும், மீன், இறைச்சி விற்பனைக் கடைகளும் உளளன.
 இந்த வளாகத்துக்குள் தினம் தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் அவர்களுக்கு தேவையான அடிப்படை தேவையான கழிவறை, குடிதண்ணீர் உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லை. மேலும் அங்கு வதைக்கப்படும் ஆடுகள், மீன் கழிவுகள் அதே பகுதியில் கொட்டப்படுகிறது. மேலும் கழிவுநீர் தேங்கி கொசுக்களின் உற்பத்திக் கேந்திரமாக உள்ளது.
 மேலும் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வணிக வளாகம் முறையான பராமரிப்பு இல்லாததால், கட்டடங்களின் மேற்கூரைகள் பெயர்ந்து விழுகிறது.
 இதனால் இங்கு வரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
 மின் வசதி இல்லாத காரணத்தால் இரவு நேரங்களில் சமூக விரோதச் செயல்களும் இங்கு நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 இவ்வாறு எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் தற்போது நாள் ஒன்றுக்கு கடை வாடகையாக ரூ. 40 வசூலிக்கப்படுகிறது. முன்பு ரூ. 10 மட்டுமே வசூக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் புதிதாக ஒப்பந்தம் எடுத்துள்ள நபரிடம் ரூ. 20தான் வாடகை வசூலிக்க வேண்டும் என்று நகராட்சி கூறியுள்ளது.
 அதன்படி ஒப்பந்ததாரரும்
 ரூ. 20-க்கு ரசீது கொடுத்துவிட்டு, ரூ. 40 தர வேண்டும் என்று கேட்டு வருகிறார்.
 இதற்கு வியாபாரிகளிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
 இது குறித்து வியாபாரிகள் சங்கம் சார்பில் நகராட்சியிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
 மேலும் வணிக வளாகத்தில் போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். கட்டடத்தில் போதிய பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
 இது குறித்து சிஐடியு நிர்வாகி ரவி கூறியது:
 கடந்த பல ஆண்டுகளாக இந்த வணிக வளாகம் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ளது. எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
 வியாபாரிகளும் வேறு வழியின்றி தங்களது பிழைப்புக்காக கடைவிரித்துள்ளனர். மேலும் பொதுமக்களுக்கும் அடிப்படை வசதி இல்லை. இது போன்ற
 பிரச்னைகளுக்கு மத்தியில் கூடுதல் பண வசூல் குறித்து வணிகர்கள் ஒன்று சேர்ந்து மறுத்ததால், அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க ஒப்பந்ததாரர் புகார் அளித்துள்ளார்.
 ஆனால் இது நகராட்சிக்கும், வணிகர்களுக்கும் உள்ள பிரச்னை என்பதால் காவல்துறை தலையிடவில்லை.
 எனவே நகராட்சி நிர்வாகம் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும். கட்டடங்களை மராமத்து பணி செய்து பொதுமக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றார். இதே கருத்தையே வியாபாரிகளும், பொதுமக்களும் தெரிவித்தனர்.
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com