காஞ்சிபுரத்தில் சீட் யாருக்கு?திமுகவினரிடையே கடும் போட்டி

காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியைப் பெறுவதில் திமுகவினர் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியைப் பெறுவதில் திமுகவினர் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் அத்தொகுதியை பெறுவதற்கு 25-க்கும் மேற்பட்டோர் கட்சித் தலைமையிடம் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் நகரச் செயலர் சன்பிராண்ட் ஆறுமுகம், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் உலகரட்சகன் மகன் ஷோபன் குமார், மாவட்ட விற்பனைக் குழுத் தலைவர் வி.எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் இப் போட்டியில் முன்னணியில் உள்ளனர்.

காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் முதலியார் சமூகத்தினர் 30 சதவீதம், வன்னியர் 30 சதவீதம், தாழ்த்தப்பட்டோர் 20 சதவீதம், இதரர் 20 சதவீதம் உள்ளனர். இத் தொகுதியைப் பொறுத்தவரை முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர் அல்லது வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவரை நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று திமுக தரப்பில் கருதப்படுகிறது.

பாமக தனித்துப் போட்டியிடுவதால் வன்னியர்களின் பெரும்பான்மையோர் வாக்குகளை அது பிரித்துவிடும் என்று திமுகவினர் கணக்கு போடுவதாகவும், இந்தச் சூழ்நிலையில் முதலியார் சமூகத்தைச் சேர்ந்த சன்பிராண்ட் ஆறுமுகத்தையோ, வி.எஸ்.ராமகிருஷ்ணனையோ நிறுத்த கட்சித் தலைமை யோசித்து வருவதாகவும் திமுக வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. ஆனாலும், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த ஷோபன் குமாரும் எப்படியாவது காஞ்சிபுரத்தில் போட்டியிடும் வாய்ப்பைப் பெற்றுவிட வேண்டும் என்று முயற்சித்து வருகிறார்.

காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியைப் பொறுத்தவரை பிள்ளையார்பாளையம் பகுதிதான் ஒவ்வொரு முறையையும் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும் மிக முக்கியமான பகுதியாக இருந்து வருகிறது. இப் பகுதியில் மட்டும் சுமார் 60 ஆயிரம் வாக்குகள் உள்ளன.

இவற்றில் சுமார் 40 ஆயிரம் வாக்குகள் முதலியார் சமூகத்தைச் சேர்ந்த வாக்குகள் ஆகும். இப் பகுதி மக்களிடம் நகரச் செயலர் சன்பிராண்ட் ஆறுமுகம் மிகவும் அறிமுகமானவர் என்பதால் அவருக்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாக திமுக வட்டாரங்கள்

தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com