குட்டைகளாக மாறிய ஊரப்பாக்கம் சாலை: மீன் பிடிக்கத் தயாராகும் கிராம மக்கள்

கூடுவாஞ்சேரியை அடுத்த ஊரப்பாக்கம்-நல்லாம்பாக்கம் சாலை அண்மையில் பெய்த கனமழையால் மீன் பிடிக்கும் அளவுக்கு குட்டைகளாக மாறி விட்டது
குட்டைகளாக மாறிய ஊரப்பாக்கம் சாலை: மீன் பிடிக்கத் தயாராகும் கிராம மக்கள்
Updated on
2 min read

கூடுவாஞ்சேரியை அடுத்த ஊரப்பாக்கம்-நல்லாம்பாக்கம் சாலை அண்மையில் பெய்த கனமழையால் மீன் பிடிக்கும் அளவுக்கு குட்டைகளாக மாறி விட்டது. இதனால் அங்கு பேருந்து நிறுத்தப்பட்டு மாணவர்கள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
 பல ஆண்டுகளாக வனத்துறை முட்டுக்கட்டையால் இச்சாலை சீரமைக்கப் படாத நிலையில் அண்மையில் பெய்த மழை காரணமாக ஆங்காங்கே குட்டைகளாகத் தண்ணீர் தேங்கி காட்சியளிக்கிறது.
 குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சாலையைக் கடந்து செல்கின்றனர்.
 இதில் கண்டிகை, மேலக்கோட்டையூரில் இருந்து குமிழி வழியாக கல்வாய் செல்லும் 10 கி.மீ. சாலையைக் கீரப்பாக்கம், நல்லாம்பாக்கம், மல்ரோசாபுரம், முருக மங்களம், அம்மணம்பாக்கம், மேட்டுப்பாளையம், குமிழி, ஒத்திவாக்கம் கல்வாய் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
 இந்தச் சாலை 5 ஆண்டுகளுக்கும் மேலாக குண்டும் குழியுமாக பராமரிப்பின்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் இச் சாலையைச் சீரமைக்க ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலை அமைப்பதற்காக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கின்றனர் அப்பகுதி கிராம மக்கள். இதேபோல் மாநில ஊரக நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான 14 கி.மீ. கொண்ட ஊரப்பாக்கம்-நல்லாம்பாக்கம் சாலை வனத் துறையின் முட்டுக்கட்டை காரணமாக பலஆண்டுகளாக சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
 இச்சாலைகளின் சீர்கேட்டினால் இப்பகுதிக்கு பேருந்து இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் தற்போது பெய்த வடகிழக்குப் பருவமழை காரணமாக சாலைகளில் ஆங்காங்கே குட்டைகளாகக் காட்சியளிக்கிறது. இதில் மீன் பிடிக்கும் அளவுக்கு தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. மேலும் சாலை சீர்கேட்டினால் இப்பகுதியில் இயக்கப்பட்டு வந்த அரசு மற்றும் மாநகரப் பேருந்துகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டன. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் மற்றும் அன்றாடம் சென்னை பகுதிக்கு வேலைக்கு சென்று வருவோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் வனத்துறை அமைச்சரிடமும் நேரில் சந்தித்து பலமுறை முறையிட்டும், புகார் தெரிவித்தும் எந்தவிதப் பயனும் இல்லை. எனவே இனியாவது துரிதகதியில் சாலைகள் உடனடியாக சீரமைக்கப்பட வேண்டும். இல்லையெனில் இதனைக்கண்டித்து கீரப்பாக்கம் ஊராட்சி பகுதி பொதுமக்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளனர். இதுமட்டும் அல்லாமல் சென்னை நகரை ஒட்டியுள்ள கூடுவாஞ்சேரியை அடுத்த கீரப்பாக்கத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
 இதில் நடுநிலைப் பள்ளி படிப்பை முடித்த மாணவர்கள் மேற்கொண்டு படிப்பைத் தொடர வேண்டும் என்றால் 12 கி.மீ. தூரத்தில் உள்ள கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், மாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நடந்து சென்று வரவேண்டும். சாலை சீர்கேட்டின் காரணமாக இப்
 பகுதிக்கு பேருந்து போக்குவரத்து அடிக்கடி துண்டிக்கப்படுவதால் ஏழை எளிய மாணவர்கள் 8-ஆம் வகுப்போடு பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி விடுவதாகவும் அவர்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
 மேலும் இச்சாலையை சீரமைக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் சம்பந்தப்பட்டத்துறையினரும் இனியாவது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com