கடந்த 14 ஆண்டுகளாக இழப்பீடு நிதி கூட கிடைக்காமல் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவத் தொழிலாளி அலைக்கழிப்புக்கு ஆளாகி வருகிறார்.
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் வட்டத்துக்குட்பட்ட கானத்தூர் ரெட்டிக்குப்பத்தைச் சேர்ந்தவர் மீனவக் கூலித் தொழிலாளி சண்முகவேல் (54). அவரது மனைவி, மூன்று மகள்கள், மகன் ஆகிய 6 பேரும் அப்பகுதியில் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2004, டிசம்பர் 26-இல் தாக்கிய சுனாமியின்போது, ராட்சத அலைகளால் இழுத்துச் செல்லப்பட்ட சண்முகவேல், பின்னர் ரெட்டிக்குப்பம் கடற்கரைப் பகுதியில் மண்ணுக்குள் புதைந்து கிடந்தார்.
அவரை, சுனாமிக்கு அடுத்த நாள் மீட்புக்குழுவினர் கோமா நிலையில் உயிருடன் மீட்டனர். அதன்பிறகு, சில ஆண்டு தொடர் சிகிச்சையின் மூலம் சண்முகவேல் இயல்பு நிலைக்குத் திரும்பினார். அப்போது, சண்முகவேல் உள்பட சுனாமியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ரூ.25 ஆயிரம் நிதியுதவியுடன், வீட்டு மனை வழங்கி வீடு கட்டித்தருமாறு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இதையடுத்து, சுனாமியால் பாதிக்கப்பட்ட பலருக்கும் நிதியுதவி, வீட்டு மனை ஆகியவை கிடைத்தன. எனினும், இத்திட்டத்தின் கீழ் சண்முகவேல் இதுவரை பயன்பெறவில்லை. அவருக்கு காஞ்சிபுரத்தை அடுத்த மேல்கதிர்பூரில் பட்டா வழங்கப்பட்டது.
ஆனால், அங்கு அவருக்கு கிராமத்தினரிடம் இருந்து எதிர்ப்பு எழுந்தது. இதனால், அவர் அப்பகுதியில் வசிக்க முடியவில்லை. இதையடுத்து, செய்யூர், முல்லிப்பாக்கம், ரெட்டிக்குப்பம் ஆகிய பகுதிகளில் வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டது. 5 முறை பட்டா ஒதுக்கப்பட்டபோதிலும், குடியிருப்புவாசிகள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்களின் தொடர் எதிர்ப்பால் அப்பகுதிகளிலும் சண்முகவேல் குடியேறவில்லை.
இதனிடையே, மாவட்ட நிர்வாகத்தால் அடுத்தடுத்து வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டு, திரும்பப் பெறப்பட்டன. இதனால், நிரந்தரமாக ஒரு இடத்தில் வீட்டுமனைப் பட்டா கோரி சண்முகவேல் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டு வந்தார். கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர் முகாமில் அவருக்கு வீட்டுமனைப் பட்டா ஆணை வழங்கப்பட்டது. அதன்பின் அவருக்கு உரிய இழப்பீடு கிடைக்காமல் அலைக்கழிப்பு ஆளாகி வருகிறார். இதுகுறித்து சண்முகவேல் கூறியது: கடந்த 14 ஆண்டுகளில் 5 இடங்களில் வீட்டுமனைப் பட்டா பெற்றும், பல்வேறு பிரச்னைகளால் அந்த இடங்களில் நான் குடியேற முடியவில்லை.
இதனால், நானும், எனது குடும்பத்தினரும் சிரமத்துக்குள்ளாகி வந்தோம். இதைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதம் மாம்பாக்கம் பகுதியில் 6-ஆவது முறையாக வீட்டுமனைப் பட்டாவை ஆட்சியர் வழங்கினார். அத்துடன், பசுமை வீடு கட்டித் தரவும், இழப்பீட்டுத் தொகை ரூ.25 ஆயிரம் தருவதற்கும் ஆட்சியர் உறுதியளித்தார்.
நிதி கிடைக்கவில்லை: இதைத் தொடர்ந்து, நான் வீடு கட்டுவதற்கு ரூ.2.5 லட்சம் நிதி வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் அண்மையில் நடைபெற்ற குறை தீர் முகாமிலேயே உரிய அலுவலருக்கு உத்தரவிட்டார். ஆனால், வட்டார வளர்ச்சி அலுவலரோ போதிய அளவு நிதி இல்லை. வீடு கட்டுவதற்கு தற்போது நிதி அளிக்க முடியாத சூழல் உள்ளது என்று கூறி விட்டார்.
மேலும், பசுமை வீடு கட்டும் பணியை தொடங்குங்கள். ஒருபகுதி முடிந்தவுடன் நிதி தருகிறேன் என்றும் அவர் கூறுகிறார். நானோ மீனவ கூலித் தொழிலாளியான நான், அத்தொழிலையும் செய்ய முடியாமல் வறுமையில் வாடுகிறேன்.
இந்தச் சூழலில் நான் எவ்வாறு வீடு கட்ட இயலும்? எனவே, பசுமை வீடு கட்டுவதற்கான நிதியையும், அப்போதைய முதல்வர் அறிவித்த ரூ.25 ஆயிரம் நிதியுதவியையும் மாவட்ட நிர்வாகம் வழங்கி உதவி செய்ய வேண்டுகிறேன் என்றார் சண்முகவேல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உலகக் கோப்பை கால்பந்து 2026: 11 ஜூன் - 19 ஜூலை

2016 ராதாபுரம் தேர்தல் வெற்றி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் இன்பதுரை மேல்முறையீடு

மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்

விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்க 3 மாத காலக்கெடுவை உச்சநீதிமன்றம் விதித்திருப்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


