போகி பண்டிகைக்கான மேளம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவை விற்பனையாகாமல் உள்ளதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மார்கழி மாத கடைசி நாளான போகிப் பண்டிகையை கொண்டாடி மகிழும் வண்ணம் பழையன கழிதலும் புதியன பகுதலும் என்ற பழமொழிக்கேற்ப போகி மேளம் தட்டி சிறுவரகள் கொண்டாடி வருகின்றனர். போகி மேளம் தயாரிப்பில் தோல் தொழிலாளர்களின் உழைப்புடன் மண்பாண்டத் தொழிலாளர்களின் உழைப்பும் அடங்கியுள்ளது.
இதுகுறித்து, திருக்கழுகுன்றம்-மாமல்லபுரம் செல்லும் புறவழிச்சாலையில் உள்ள அருந்ததியர்புரத்தில் வசிக்கும் மொத்த விலைக்கு விற்கும் போகி மேளம் தயாரிப்பாளர் மாத்தையா கூறியதாவது: போகி மேளம் செய்தற்காக மண்வட்டில் என்றழைக்கப்படும் கந்திரியும், தோல், சுண்ணாம்பு பசை ஆகிய பொருள்களும் தேவைப்படும். சென்னையில் பதப்படுத்தப்பட்ட மாட்டுத் தோலை வாங்கி வந்து கடினமாக இருக்கும் அந்த தோலை சுண்ணாம்பு நீரில் ஊர வைப்போம். தோல் மென்மையாகும் வரை மட்டுமே ஊற வைக்க வேண்டும். ஊறவைத்த பின்னர் மென்மையான தோல் கிடைக்கும். அதை மண் தொழிலாளர்களிடம் இருந்து வாங்கிய மண்வட்டில் மீது பசையிட்டு ஒட்டி காய வைப்போம். பின்னர் மேளத்தை தட்டும் போது தோலின் மென்மைக்கேற்ப ஓசை வெளிப்படும். பின்னர் அறைகளில் அடுக்கி வைத்திருப்போம். இவற்றை டிசம்பர் மாத இறுதி வாரத்திலும், ஜனவரி முதல் வாரத்திலும் செங்கல்பட்டு, தாம்பரம், திருப்போரூர், திருக்கழுகுன்றம், மாமல்லபுரம், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வாகனங்களில் வந்து மொத்தமாக வாங்கிச் செல்வர். மேளங்கள் விற்பனையான உடனேயே அடுத்த ஆண்டுக்காக தோலுக்கும், மண் வட்டில் கந்திரிக்கும் ஒரு பகுதி பணத்தை முன்பணமாக செலுத்தி வைத்திருப்போம். இல்லை என்றால் தோல் கிடைப்பது கடினமாகிவிடும். மேளம் செய்யக்கூடிய அடக்கவிலையே ரூ. 15 ஆகிறது. நாங்கள் ரூ. 25-க்கு விற்போம். இதனை வாங்கிச்செல்லும் வியாபாரிகள் ரூ. 35முதல் ரூ. 50 வரை விற்பனை செய்வர். இந்நிலையில் இவற்றை வாங்க வியாபாரிகள் இதுவரை வராததால் அடுக்கி வைத்த போகி மேளங்கள் அப்படியே உள்ளன.
இதற்குக் காரணம் பிளாஸ்டிக்கினால் ஆன பல்வேறு வடிவங்களிலும், வண்ணங்களிலும் தயாரிக்கப்பட்டு சாலைகளிலும், கடைகளிலும் விற்கப்படும் மேளங்கள் மக்களின் கவனத்தை திசை திருப்புகிறது. இதனால் எங்களின் உழைப்பு ஏமாற்றத்தை அளிக்கிறது. மேலும், மிகக் குறைந்த விலைக்கு கேட்பதால், விலைப்படியவில்லை. இதனால் இங்கு வசிக்கும் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தயாரித்து வைத்துள்ள போகி மேளங்களை விற்பனை செய்யமுடியாமல் உள்ளனர் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.