தலித் கிறிஸ்தவர்களுக்கு 65% இடஒதுக்கீடு வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

கிறிஸ்தவ நிறுவனங்களில் தலித் கிறிஸ்தவர்களுக்கு 65 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி தலித் கிறிஸ்தவர் உரிமை இயக்கம் சார்பில் செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலை ராட்டினங்கிணறு

கிறிஸ்தவ நிறுவனங்களில் தலித் கிறிஸ்தவர்களுக்கு 65 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி தலித் கிறிஸ்தவர் உரிமை இயக்கம் சார்பில் செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலை ராட்டினங்கிணறு அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலித் கிறிஸ்தவர் உரிமை இயக்கத்தின் நிறுவனர் எல்.யேசுமரியான் தலைமை வகித்து தலைமையுரையாற்றினார். கல்வி நிறுவனங்களிலும், வேலைவாய்ப்புகளிலும் இட ஒதுக்கீடு வழங்காமல், தலித் கிறிஸ்தவ மாணவர்களையும், மக்களையும் புறக்கணிக்கும் கிறிஸ்தவ நிறுவனங்களின் நிர்வாகங்களை அவர் கண்டித்துப் பேசினார்.
 மேலும், லயோலா கல்லூரி போன்ற பெரிய கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் கனவுகளைச் சிதைக்கும் வகையில் காலையில் ரெகுலர் வகுப்பு எனவும் மாலைநேர வகுப்பு என்றும் பிரித்து மாணவர்களுக்கு தனித்தனி கட்டணங்களை வசூலிப்பதாக அவர் தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில் "இவ்வாறு கல்வி நிறுவனத்தை வியாபார நிறுவனமாக மாற்றுவதைக் கைவிட வேண்டும். பணம் சம்பாதிக்க பல வழிகள் உண்டு. மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தலித் கிறிஸ்தவ மாணவர்களைப் புறக்கணிப்பதையும், காலை வகுப்பு, மாலை வகுப்பு என்று பணம் பறிப்பதையும் நிறுத்த வேண்டும். அவர்களுக்குத் தரமான கல்வி மற்றும் உதவித்தொகை வழங்க முயற்சி மேற்கொண்டு அவர்களின் எதிர்காலக் கனவுகளை நனவாக்கும் கல்வி நிறுவனமாக மாற வேண்டும்' என்றார்.
 தலித் கிறிஸ்தவர் உரிமை இயக்க நிர்வாகிகள் ஜெயக்குமார், லோகு, கேளம்பாக்கம் ஐ.வளமரசு, இமானுவேல், தொழிற்சங்கச் செயலாளர்கள் சத்யா, தாஸ் செந்தில் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்துக்கு முன்னிலை வகித்தனர்.
 இயக்கத்தின் கலைக் குழுவைச் சேர்ந்த ஸ்டீஃபன், சதீஷ், ஆன்டனிராஜ் உள்ளிட்டோர் விழிப்புணர்வுக் கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். இயக்கத்தின் மாநிலத் தலைவர் எம்.எஸ்.ராஜன், மாநில பொதுச் செயலாளர் எஸ்.தன்ராஜ், சென்னை மண்டல அமைப்பாளர் என்.எஸ்.சுந்தரம், செங்கை மண்டல அமைப்பாளர் எஸ்.அகஸ்டின் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.
 தீர்மானங்கள்: கிறிஸ்தவ நிறுவனங்களில் தலித் கிறிஸ்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் நிர்வாகப் பொறுப்புகளில் 65 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்; செங்கல்பட்டு மறை மாவட்டம், கேளம்பாக்கத்தில் உள்ள பழம்பெருமை வாய்ந்த பங்கு தேவாலயத்தின் பெயரை மாற்றும் முயற்சியைக் கைவிட வேண்டும்; திருச்சபையின் பங்குப் பேரவைகளில் தலித் கிறிஸ்தவர்களுக்கு தகுந்த பிரதிநிதித்துவமும், நிர்வாகப் பொறுப்புகளில் முன்னுரிமையும் அளிக்க வேண்டும்; மறை மாவட்டம் மற்றும் துறவறச் சபைகளின் சொத்துக்கள் சூறையாடப்படுவது நிறுத்தப்பட வேண்டும்; இதில் வெளிப்படைத்தன்மையைக் கடைப்படிப்பதோடு, மக்களுக்கு சரியான தகவலும் புள்ளிவிவரங்களும் தர வேண்டும்; தலித் மாணவ, மாணவிகளை சுயநிதிப் பாடப்பிரிவுகளில் தள்ளிவிடாமல் அரசு நிதிப் பாடப் பிரிவுகளில் சேர்க்க வேண்டும்; மேலும், அந்த மாணவ, மாணவிகளுக்கு உதவித் தொகைகளை வழங்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானமாங்களாக நிறைவேற்றப்பட்டன.
 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தலித் கிறிஸ்தவர் உரிமை இயக்க நிர்வாகிள் இந்த ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com