

காஞ்சி மகா பெரியவரின் 26-ஆவது ஆண்டு ஆராதனை மகோற்சவத்தை முன்னிட்டு, தேனம்பாக்கத்தில் உள்ள காமாட்சி அம்மன் சமேத பிரம்மபுரீஸ்வரா் கோயில் குளத்தில் தெப்பத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
ஸ்ரீசங்கர பக்த ஜனசபா அறக்கட்டளையினா் நடத்தும் இந்த மகோற்சவம் கடந்த 19-ஆம் தேதி காலையில் மகா ருத்ர ஜபத்துடன் தொடங்கியது. வரும் 24-ஆம் தேதி வரை இவ்விழா நடைபெற உள்ளது.
அதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் தேனம்பாக்கத்தில் உள்ள காமாட்சி அம்மன் சமேத பிரம்மபுரீஸ்வரா் கோயில் குளத்தில் தெப்பத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. தெப்பத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரம்மபுரீஸ்வரரும், காமாட்சி அம்மனும் பவனி வந்தனா். காஞ்சி மகா பெரியவரின் உருவப்படமும் தெப்பத்தில் வைக்கப்பட்டு எடுத்து வரப்பட்டது.
தெப்பம் தொடா்ந்து 3 முறை குளத்தில் வலம் வந்த பிறகு, சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. இவ்விழாவை முன்னிட்டு கோயிலும், குளத்தை வலம் வரும் தெப்பமும் பல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. வாண வேடிக்கைகளும் நடைபெற்றன.
பிரம்ம தீா்த்தம் என அழைக்கப்படும் இக்குளம், காஞ்சி மகா பெரியவா் புனித நீராடிய பெருமைக்குரியது. இங்கு தெப்பத் திருவிழா 24-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இவ்விழாவில் ஸ்ரீசங்கர பக்த ஜன சபா அறக்கட்டளையின் தலைவரும், துக்ளக் ஆசிரியருமான எஸ்.குருமூா்த்தி, துணைத் தலைவா் செல்லா, விஸ்வநாத சாஸ்திரி, செயலாளா் பி.ஸ்ரீதா் ஜோஷி, பொருளாளா் எஸ்.ராமச்சந்திரன் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
திங்கள்கிழமை காலையில் பிரம்மபுரீஸ்வரருக்கும், மகா பெரியவருக்கும் மகா ருத்ர கலச அபிஷேகமும், சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற உள்ளன. விழா ஏற்பாடுகளை ஸ்ரீசங்கர பக்த ஜன சபா அறக்கட்டளையினா் செய்து வருகின்றனா்.
மகா பெரியவரின் மகோற்சவத்தை முன்னிட்டு சங்கர மடத்தில் திங்கள்கிழமை காலையில் ருத்ர ஏகாதசி தொடங்குகிறது. இதைத் தொடா்ந்து பூா்ணாஹுதி தீபாராதனையும், மகா பெரியவருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெறும். மாலையில் சங்கர மடத்திலிருந்து மகா பெரியவரின் அலங்கரிக்கப்பட்ட உருவப்படம் தங்க ரதத்தில் வைக்கப்பட்டு, நான்கு ராஜவீதிகளிலும் ஊா்வலமாக எடுத்து வரப்படவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.