நாடு முழுவதும் 736 அணைகள் ரூ. 10,211 கோடி செலவில் சீரமைப்புவெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா் அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: ரவிக்குமாா் எம்.பி.பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதிநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்: 53% உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பு
/

ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் சாலை மறியல்: நூற்றுக்கணக்கானோர் கைது

ஜாக்டோ - ஜியோஅமைப்பினர் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :24 ஜனவரி 2019, 3:28 am IST


ஜாக்டோ - ஜியோஅமைப்பினர் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டங்களிலும் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, 2 -ஆவது நாளாக காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே காவலான் கேட் பகுதியில் ஜாக்டோ -ஜியோ அமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
தொடர்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பிய அவர்கள், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மண்டபத்தில் இருந்த ஜாக்டோ- ஜியோ அமைப்பினருக்கு காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துப் பேசினார். உத்தரமேரூரில் போராட்டத்தில் ஈடுபட்ட திரளான ஜாக்டோ- ஜியோ அமைப்பினரை போலீஸார் கைது செய்தனர். 
ஆதரவு போராட்டம்: ஜாக்டோ- ஜியோ அமைப்பினருக்கு ஆதரவு தெரிவித்து, மாவட்டக் காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் பணிபுரிவோர் பணியைப் புறக்கணித்து, அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பினர். 
போராட்டம் காரணமாக மாவட்டத்திலுள்ள பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை. இதனால், பள்ளிக்கு வந்த மாணவர்கள் வீட்டுக்கு திரும்பிச் சென்றனர்.
செங்கல்பட்டில்...
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே வட்டக்கிளை ஒருங்கிணைப்பாளர் மு.தாமோதரன் தலைமையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலர் ரவிச்சந்திரன் மறியல் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
சாலை மறியலில் ஈடுபட்ட 95 பேரை செங்கல்பட்டு டிஎஸ்பி கந்தன், காவல் ஆய்வாளர் செளந்தரராஜன் தலைமையிலான போலீஸார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். 
ஆசிரியர்களின் போராட்டம் காரணமாக செங்கல்பட்டு, திருக்கழுகுன்றம், மாமல்லபுரம், திருப்போரூர் ஆகிய இடங்களைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் இரண்டாவது நாளாக பள்ளிக்கு வந்து தாங்களாகவே படித்துவிட்டு, திரும்பினர்.
ஸ்ரீபெரும்புதூரில்...
ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச் செயலர் ரஞ்சித் சிங், அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் நிர்வாகி ஆறுமுகம் ஆகியோர் தலைமையிலான ஜாக்டோ-ஜியோஅமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர்-திருவள்ளூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
போராட்டத்தில் ஈடுபட்ட 120 பேரை ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். 
மதுராந்தகத்தில்...
மதுராந்தகம் நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்தில், மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியங்களைச் சேர்ந்த ஆசிரிய, ஆசிரியைகள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் உள்பட 350 பேர் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் ஏழுமலை தலைமையில் நடைபெற்ற போராட்டத்தை ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாநில பொறுப்பாளர் தாஸ் தொடங்கி வைத்தார். மறியலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர், மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.