

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் பகுதியில் முதன் முறையாக தெலுங்கு மொழி வாசகம் கொண்ட வாமனக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூரிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் பருத்திக்கொல்லை கிராமம் உள்ளது. இங்கு கிராம தேவதை எனும் எல்லைகாத்தாள் அம்மன் கல்வெட்டு உள்ளது. இதுதொடர்பாக உத்தரமேரூர் வரலாற்று மையத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அவ்விடத்துக்குச் சென்று ஆய்வு செய்துள்ளனர். அப்போது, அக்கல்வெட்டில் தெலுங்கு மொழி வாசகம், வாமன உருவம் பதிக்கப்பட்டிருந்தது. அது, நிலக்கொடைக்கல் எனும் வாமனக்கல் என்பதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து உத்தரமேரூர் வரலாற்று மைய ஆய்வாளர் பாலாஜி கூறியதாவது: உத்தரமேரூரை அடுத்த பருத்திக் கொல்லை கிராமத்தில் கிராமதேவதையாக வழிபட்டு வரும் கல்வெட்டில் தெலுங்கு மொழி வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து எங்களுக்கு தகவல் வந்தது. அதன்பேரில், அவ்விடத்துக்குச் சென்று ஆய்வு நடத்தினோம்.
முதன்முறையாக..: அக்கல்வெட்டு 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வாமனக்கல் எனப்படும் நிலக்கொடைக்கல் என்பது தெரியவந்தது. மேலும், அக்கல்வெட்டில் தெலுங்கு மொழி வாசகங்கள், வாமன உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. இக்கல் பொதுவாக காஞ்சிபுரம் மாவட்டப்பகுதியில் இதுவரை கண்டெடுக்கப்படவில்லை. இக்கல் பெருமாள் கோயிலுக்கு நிலம் தானமாக வழங்குவதை குறிக்கிறது. இதைத்தொடர்ந்து, தொல்லியல் துறை ஓய்வு பெற்ற பேராசிரியர் மாக்சியா காந்தியின் ஆலோசனைப்படி, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுகவனம் முருகன் உதவியுடன் இக்கல்வெட்டை கர்நாடக மாநிலம்,பெங்களூருக்கு அனுப்பி வைத்து, அதில் பொறிக்கப்பட்ட தெலுங்கு மொழி வாசகத்தின் விவரங்களைக் கேட்டறிந்தோம்.
அதன்படி, பெருமாள் கோயில்களுக்கு தானமாகக் கொடுக்கப்படும் நிலத்தின் எல்லைகளைக் குறிப்பதற்கு கற்களை நட்டு வைப்பார்கள் எனக் கூறப்படுகிறது. அதோடு, அக்கற்களில் பெருமாளின் 5-ஆவது அவதாரமான வாமன உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கற்களில் யார் நிலத்தை தானமாக வழங்கினார்களோ அவர்களின் பெயரும் இடம் பெற்றிருப்பது வழக்கம். இவ்வாறு பெருமாள் கோயில்களுக்கு நிலக்கொடையளிக்கும் செய்தியை கூறும் கல்லே வாமனக்கல் எனப்படுகிறது.
வாமனக்கல்லில் இடம்பெற்றவை: அதன்படி, இக்கல்வெட்டில், தெலுங்கு மொழி வாசகம் கொண்ட மூன்று வரிகள் இடம் பெற்றுள்ளன. வலப்பக்கம் சூரியனும், இடப்பக்கம் பிறை நிலவும், இடையே வாமன அவதாரமும் பொறிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய பகுதி பூமியில் புதைந்துள்ளது. வாமன அவதாரத்தின் வலக்கையில் கமண்டலம், இடக்கையில் குடை உள்ளது. இதில், தெலுங்கு மொழியில் குறிப்பிடப்பட்டிருக்கும் முதல் மூன்று வரியானது: சிறீரங்க, வேங்கட ஜோசியல, கும்பிசி ரு நாளீஎன குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, ஸ்ரீ ரங்கத்தை சார்ந்த ஜோஸியத்தில் வித்வானாகிய வேங்கடன் என்பவர் நிலம் தானமாக வழங்கினார். இந்நிலத்தின் வருவாயில் பெருமாளுக்கு அமுது படைக்க வேண்டும் என்னும் செய்தியாக இருக்க வாய்ப்புள்ளது. இதில் இடம்பெற்றுள்ள, சூரிய, சந்திர, சின்னங்களின் பொருள்: இந்த நிலக்கொடையானது சூரியன் உள்ளளவும், சந்திரன் உள்ளளவும் செல்லுபடியாகும் என்பதைக் குறிக்கிறது.
நமது மாவட்டத்தில் தற்போது வரை கிடைத்துள்ளதில் தெலுங்கு மொழி கல்வெட்டுடன் கூடிய ஒரே வாமனக்கல் இது மட்டுமே. உத்தரமேரூரை 15-ஆம் நூற்றாண்டில் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட விஜய நகரப் பேரரசர்கள் ஆட்சி செய்தனர்.
குறிப்பாக கிருஷ்ண தேவராயர், காஞ்சிபுரம், உத்தரமேரூர் கோயில்களுக்கு திருப்பணிகள் செய்து, நிலக்கொடைகள் வழங்கியுள்ளனர்.இதுகுறித்து, தமிழ்நாடு தொல்லியல் துறையினர் மேலும் பல தகவல்களுக்காக ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் அருங்காட்சியகக் காப்பாட்சியர் உமாசங்கர் கூறியது: இம்மாவட்டத்தில் தெலுங்கு வம்சாவளியினர் ஆட்சி புரிந்துள்ளனர். அப்போது, அவர்கள் கோயில் புனரமைப்பு, திருப்பணி, வழிப்போக்கர் மண்டபம், அன்னதானக் கூடத்துக்கென பல்வேறு நிலங்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர். இருப்பினும், இதுகுறித்த தகவல் அடங்கிய வாமனக்கல் எனும் கல்வெட்டு உத்தரமேரூரில் கிடைத்திருப்பது வரவேற்கத் தக்கது.
இதன்மூலம், தொண்டை மண்டல பகுதியில் விஜயநகர மன்னர் ஆட்சி புரிந்து பெருமாள் கோயில்களுக்கு நில தானம் செய்தமைக்கான குறிப்பு கிடைத்துள்ளது. அதன்படி, இதுவரை தானமாக கொடுத்தது குறித்த கல்வெட்டு கிடைத்திருப்பது மிகச்சொற்பமே. தற்போது வாமனக்கல் கிடைத்திருப்பது கூடுதல் வரலாற்றுச் செய்தியாக உள்ளது. மேலும் ஆய்வு செய்தால் கூடுதல் தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.