தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாருக்காக 7 இடங்களில் தபால் வாக்குப்பதிவு
By DIN | Published On : 12th April 2019 04:24 AM | Last Updated : 12th April 2019 04:24 AM | அ+அ அ- |

காஞ்சிபுரம் சார்-ஆட்சியர் அலுவலகத்தில் வாக்குப்பதிவு செய்த பெண் போலீஸ் அதிகாரி.
மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாருக்காக வியாழக்கிழமை 7 இடங்களில் தபால் வாக்குப்பதிவு நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் (தனி), ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கு வரும் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தொகுதிகளில் 21 ஆயிரம் வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளனர். அதேபோல், மாவட்டம் முழுவதும் 2,072 போலீஸார் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளனர்.
முதல்கட்டமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் போலீஸாருக்கான தபால் வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், உத்தரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், செய்யூர், மதுராந்தகம், திருப்போரூர் ஆகிய 7 பேரவைத் தொகுதிகளில் காலை 10 முதல் மாலை 7 மணி வரை அந்தந்த உதவி தேர்தல் அலுவலகத்தில் இந்த வாக்குப்பதிவு நடைபெற்றது.
அதன்படி, தேர்தல் பணி ஆற்றவுள்ள அதிகாரிகள் உள்ளிட்ட போலீஸாருக்கு ஏற்கெனவே தபால் வாக்குப்பதிவுக்கான படிவம் 12 வழங்கப்பட்டிருந்தது. காஞ்சிபுரம் சார்-ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போலீஸார் தங்களுடைய அடையாள அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஆவணங்களைக் காண்பித்து வாக்குச் சீட்டுகளைப் பெற்றனர். பின்னர், உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திட்டனர். தொடர்ந்து, சரிபார்ப்பு, சான்று அலுவலர்களிடம் கையொப்பம் பெற்று தங்கள் வாக்கை அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் செலுத்தினர்.
இதேபோல், இதர மாவட்டங்களில் பணிபுரியும் 114 போலீஸாருக்கும் தபால் வாக்குச்சீட்டுகள் வழங்கப்பட்டன. மேலும், சென்னை புறநகர் பகுதி மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் போலீஸாருக்கு தபால் வாக்குகளைப் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.