வாக்காளர்களுக்கு பண விநியோகம்: அதிமுக, திமுகவினர் மீது வழக்குப்பதிவு
By DIN | Published On : 17th April 2019 12:54 AM | Last Updated : 17th April 2019 12:54 AM | அ+அ அ- |

காஞ்சிபுரத்தில் அதிமுகவினரும், திமுகவினரும் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ததாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினர் கடந்த மாதத்திலிருந்து பிரசாரம் செய்து வருகின்றனர். காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் மரகதம் குமரவேலும், திமுக சார்பில் ஜி.செல்வமும், அமமுக சார்பில் முட்டுக்காடு முனுசாமியும் போட்டியிடுகின்றனர்.
இத்தேர்தலில் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமமுக துணை பொதுச் செயலர் தினகரன் மற்றும் பல்வேறு தலைவர்களும் பிரசாரம் செய்து வந்தனர்.
இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வாக்காளர்களுக்கு சில கட்சியினர் தலா ரூ.200 வழங்கியதாக கூறப்பட்டது. அதையடுத்து, காஞ்சிபுரம் 38-ஆவது வார்டு பகுதியில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பண விநியோகம் செய்ததாக வந்த தகவலை அடுத்து பறக்கும் படையினர் திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரூ.51,200 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், காஞ்சிபுரம் நகராட்சிக்குட்பட்ட திருக்காலிமேடு பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து பறக்கும் படையினர் அங்கு சென்று, திமுகவினரிடம் இருந்து ரூ.29,200 ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனர்.
காஞ்சிபுரத்திலும் திமுகவினரிடம் இருந்து செவ்வாய்க்கிழமை ரூ.4,400-ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். கடந்த 2 நாள்களில் மட்டும் அதிமுக, திமுகவினரிடம் இருந்து ரூ.84 ஆயிரத்து 800 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி உத்தரவின் பேரில் விஷ்ணு காஞ்சி போலீஸார் செவ்வாய்க்கிழமை 3 வழக்குகளைப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...