கொலை முயற்சி கும்பலிடம் இருந்து இளைஞரை மீட்ட போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு
By DIN | Published On : 06th February 2019 04:05 AM | Last Updated : 06th February 2019 04:05 AM | அ+அ அ- |

பட்டப் பகலில் கொலை முயற்சியில் ஈடுபட்ட கும்பலிடமிருந்து இளைஞரைக் காப்பாற்றிய போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி செவ்வாய்க்கிழமை பாராட்டுத் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டில் திங்கள்கிழமை மதியம் சென்னையைச் சேர்ந்த ஹரி என்பவரை 5 பேர் கொண்ட கும்பல் ஆட்டோவில் கடத்தி வந்தது. தொடர்ந்து, செங்கல்பட்டு கிராமிய காவல் நிலையத்துக்குள்பட்ட மேம்பாலம் அருகே அந்த இளைஞரை கொலை செய்ய முயன்றனர்.
அப்போது, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதில் பலத்த காயங்களுடன் ஹரி கூச்சலிட்டார். அச்சமயம், அவ்வழியாக வந்த செங்கல்பட்டு தனிப் பிரிவு காவலர் தமிழ்வாணன், படாளம் காவல் உதவி ஆய்வாளர் ஜார்ஜ் ஆகிய இருவரும் அந்த கும்பலிடமிருந்து ஹரியை பலத்த காயங்களுடன் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அத்துடன், ஹரியை கொலை செய்ய முயன்ற 5 பேர் கொண்ட கும்பலில் 2 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து, அரிவாள்களைப் பறிமுதல் செய்தனர். இச்சம்பவத்தில், தீரத்துடன் செயல்பட்ட போலீஸாரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி செவ்வாய்க்கிழமை நேரில் அழைத்துப், பாராட்டி, பரிசுகளை வழங்கினார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...