அதிமுக-திமுக மோதல்: கூட்டுறவு வங்கி நிர்வாகிகளுக்கான தேர்தல் நிறுத்தம்: தேர்தல் அலுவலர் நடவடிக்கை
By DIN | Published On : 12th February 2019 03:03 AM | Last Updated : 12th February 2019 03:03 AM | அ+அ அ- |

அதிமுக, திமுக மோதலால் கூட்டுறவு வங்கி நிர்வாகிகள் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் ஆணை பிறப்பித்தார்.
சின்ன காஞ்சிபுரத்தில் கூட்டுறவு நகர வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் 18 ஆயிரத்து 468 பேர் உறுப்பினர்கள் உள்ளனர். வங்கியின் நிர்வாகக் குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மேட்டுக் கம்மாளத் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இத்தேர்தலில் 11 நிர்வாகக் குழு உறுப்பினர் பதவிகளுக்கு 37 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
காலை 9 மணிக்குத் தொடங்கிய தேர்தலில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த கூட்டுறவு நகர வங்கி உறுப்பினர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்ய வந்தனர். இத்தேர்தல் பாதுகாப்புப் பணியில் விஷ்ணு காஞ்சி போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர். வாக்குப்பதிவு நடைபெற்று வந்தபோது, அதிமுகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது. மேலும், வாக்குப் பெட்டி உடைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வன்முறையை அடுத்து கூட்டுறவு நகர வங்கி தேர்தலை கூட்டுறவு அலுவலர் தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.
அதைத் தொடர்ந்து, அதிமுகவிருக்கும், திமுகவினருக்கும் இடையே தேர்தல் நடைபெற்ற வாக்குச்சாவடி முன்பு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸார் அவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
அமைதியான முறையில் நடந்துகொண்டால்தான் தொடர்ந்து வாக்குப்பதிவு செய்ய அனுமதிப்போம் என்றும் தெரிவித்தனர்.
இதையடுத்து திமுக உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு எதிராக அதிமுகவினரும் போராட்டம் நடத்தினர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
இதைத் தொடர்ந்து, மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு சரிவர நடைபெறவில்லை. எனவே, தேர்தல் அலுவலரும் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலக அதிகாரிகளும் வாக்குச்சாவடி மையத்தைப் பார்வையிட்டு ஆலோசித்தனர்.
பின்பு, வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்ற வன்முறை காரணமாக கூட்டுறவு சங்கங்களின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தேர்தல் நிறுத்தப்படுகிறது என தேர்தல் அலுவலர் முத்துப்பாண்டியன் ஆணை பிறப்பித்தார்.
அதன்படி இத்தேர்தல் நிறுத்தப்பட்டது. ஏற்கெனவே, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமும் இதே போல் தேர்தல் நடைபெற்றபோது ஏற்பட்ட ரகளையால் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.