ஸ்ரீபெரும்புதூர் அருகே திமுக நிர்வாகி வெட்டிக் கொலை
By DIN | Published On : 12th February 2019 03:02 AM | Last Updated : 12th February 2019 03:02 AM | அ+அ அ- |

ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் பகுதி திமுக நிர்வாகி, மர்ம நபர்களால் திங்கள்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்(47) . அவர் திமுக ஊராட்சி செயலராகவும், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி இயக்குநராகவும் இருந்துவந்தார். மேலும் டி.ஆர்.ஆர். என்டர்பிரைசஸ் என்ற பெயரில் கட்டுமானத் தொழில், தொழிற்சாலைகளில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் கழிவுப் பொருள்களை எடுப்பது, கார் விற்பனை உள்ளிட்ட தொழில்களையும் செய்து வந்தார்.
இதற்காக ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் சாலை கச்சிப்பட்டு பகுதியில் அலுவலகம் வைத்து நடத்தி வந்தார்.
இந்நிலையில், திமுக சார்பில் நடத்தப்பட்டு வரும் ஊராட்சி சபைக் கூட்டம் பிள்ளைப்பாக்கம் பகுதியில் ரமேஷ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை முடித்து விட்டு அவர் தனது அலுவலகத்துக்கு மதியம் வந்தார். அப்போது மூன்று ஆட்டோக்களில் முகமுடி அணிந்து வந்த சுமார் 15 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் அலுவலகத்துக்குள் நுழைந்தது. இதைப் பார்த்த ரமேஷின் அலுவலகத்தில் பணியாற்றும் பார்த்திபன் அவர்களைத் தடுத்தார்.
அவரை தலை மற்றும் கையில் அக்கும்பல் வெட்டியது. மேலும் அலுவலகத்தில் பணியாற்றும் லதா என்பவரை மிரட்டி அலுவலகத்தில் இருந்து வெளியே அனுப்பி விட்டு ரமேஷை, தலை, முகம் மற்றும் கைகளில் வெட்டிவிட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர்.
இத்தாக்குதலில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் விரைந்து வந்து, ரமேஷின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இக்கொலை தொடர்பாக அவர்கள் விசாரனை நடத்தி வருகின்றனர்.
இக்கொலை குறித்து தகவல் அறிந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி, கொலை நிகழ்ந்த இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். மேலும் குற்றவாளிகளை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தொழில் போட்டி காரணமாக ரமேஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.