செங்கல்பட்டு அருகே கார் நிறுவன மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து, 50 சவரன் நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ. 50,000 ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
நெம்மேலி கிராமத்தில் உள்ள சாய் லட்சுமி நகரைச் சேர்ந்தவர் கணேஷ் (45). தனியார் கார் நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி உஷா (40). செங்கல்பட்டு மின் வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், கணேஷ் தனது குடும்பத்தினருடன் வேலூருக்குச் சென்றுவிட்டு, புதன்கிழமை வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவுகள் திறந்து கிடந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 50 சவரன் நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 50,000 ரொக்கம், ரூ. 30,000 மதிப்பிலான கைக்கடிகாரம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது.
இதுகுறித்து, செங்கல்பட்டு கிராமிய காவல் நிலையத்தில் கணேஷ் புகார் அளித்தார். இதையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி, டி.எஸ்.பி. கந்தன், ஆய்வாளர் இளங்கோவன் உள்ளிட்டோர், சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து செங்கல்பட்டு கிராமிய காவல் ஆய்வாளர் இளங்கோவன் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.