செங்கை புத்தகத் திருவிழா நிறைவு
By DIN | Published On : 04th January 2019 03:12 AM | Last Updated : 04th January 2019 03:12 AM | அ+அ அ- |

செங்கல்பட்டில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் செங்கை பாரதியார் மன்றம் சார்பில் நடைபெற்று வந்த 10 நாள் செங்கை புத்தகத் திருவிழா புதன்கிழமை நிறைவடைந்தது.
செங்கல்பட்டில் மூன்றாம் ஆண்டாக நடைபெற்ற செங்கை புத்தகத் திருவிழா கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.
விழாவில், கிராமிய கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம், தற்காப்புக் கலை, பாடல்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தினமும் மாலை 6 மணிக்கு மேல் நடைபெற்ற கருத்தரங்கில், திரைப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார், வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் ஆர்.ரமணன், இந்திய தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர் அஸ்லாம் உள்ளிட்ட பலர் சிறப்புரையாற்றினர். இந்நிலையில், கருத்தரங்கின் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத் துணைத் தலைவர் ஆர்.தனஞ்செயன் தலைமை வகித்தார். செங்கை பாரதியார் மன்ற ஆலோசகர் மா.ச.முனுசாமி செங்கை புத்தகத் திருவிழா குழுவின் இணைச் செயலாளர் கோ.ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிதிக் குழு பி.செல்வராஜ் வரவேற்றார். இதில், தத்துவங்கள் சொல்லும் தராதரம் என்ற தலைப்பில் திரைப்பட இயக்குநர் கோபி நயினார், தமிழால் இணைவோம் என்ற தலைப்பில் ஆளூர் ஷா நவாஸ் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
முடிவில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அணுபுரம் கிளைச் செயலாளர் பொன்.கதிரவன் நன்றி கூறினார்.
செங்கை புத்தகத் திருவிழா அரங்கின் வெளிப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிறிய பிர்லா கோளரங்கத்தை செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியர் கண்டு மகிழ்ந்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...