காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் ஜவுளி கடைகளில் நகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தி, தடை செய்யப்பட்ட 2 டன் பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தனர். மேலும், பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்திய தனியார் ஜவுளிக் கடைகளுக்கு ரூ. 1.50 லட்சம் அபராதம் விதித்தனர்.
தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தி, தூக்கி வீசும் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவது, விற்பனை செய்வது மற்றும் உற்பத்தி செய்வதற்கான தடை கடந்த 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில், தடையை மீறி, கடைகளில் வைத்திருக்கும் பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்யும் பணிகளில் காஞ்சிபுரம் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், கடைகள், ஜவுளிக் கடைகள், தனியார் நிறுவனங்களில் சோதனை நடத்தி, கடந்த இரண்டு நாள்களில் மட்டும் 2,000 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் ஜவுளிக் கடைகளில் காஞ்சிபுரம் பெரு நகராட்சி நகர் நல அலுவலர் முத்து தலைமையிலான நகராட்சி ஊழியர்கள் வியாழக்கிழமை தீவிர சோதனை நடத்தினர். இதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து, தனியார் ஜவுளிக் கடைக்கு ரூ. 1 லட்சமும், 4 ஜவுளிக் கடைகளுக்கு தலா ரூ. 12 ஆயிரத்து 500 என ஒரே நாளில் ரூ. 1.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை நகராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.