பாலாற்றுக் கால்வாய் ஆக்கிரமிப்பு: வருவாய்த் துறையினர் ஆய்வு
By DIN | Published On : 07th January 2019 12:35 AM | Last Updated : 07th January 2019 12:35 AM | அ+அ அ- |

உத்தரமேரூர் ஒன்றியத்தில், பாலாற்றுக் கால்வாய் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை வருவாய்த் துறையினர் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனர்.
உத்தரமேரூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட சாலவாக்கம் அருகே அரும்புலியூர் ஏரி உள்ளது. இந்த ஏரிக்குச் செல்லும் பாலாற்றுக் கால்வாய் பினாயூர் எனும் இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான இந்த 500 ஏக்கர் ஏரி நீர் மூலம், சீதாவரம், காவணிப்பாக்கம், பேரணக்காவூர், மாம்பாக்கம், அரும்புலியூர் உள்ளிட்ட 7 கிராம விவசாயிகள் பாசன வசதி பெறுகின்றனர். அவ்வகையில், இந்த ஏரியிலிருந்து பினாயூர் பாலாற்றிலிருந்து பிரிந்து செல்லும் 60 அடி அகலம் கொண்ட, 5 கி. மீ. பாசனக் கால்வாய், பினாயூர் விவசாய வயல்வெளிகளில் செல்கிறது. இந்த கால்வாயின் பெரும் பகுதிகளை பினாயூர் விவசாயிகள் ஆக்கிரமிப்பு செய்து, தங்களது நிலங்களுடன் இணைத்துக் கொண்டதாக, அரும்புலியூர் பகுதி விவசாயிகள், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். ஆட்சியரின் உத்தரவின்பேரில், அரும்புலியூர் வருவாய் ஆய்வாளர் ராணி தலைமையில், சாலவாக்கம் நில அளவையர் சுந்தரவடிவேலு உள்ளிட்ட அலுவலர்கள் பாலாற்றுக் கால்வாய் பகுதிகளை அளவீடு செய்தனர். அதில், கால்வாயின் பெரும் பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை தாக்கல் செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.