ஒரத்தூர் புதிய நீர்த்தேக்கத் திட்டம்: கூடுதலாக ரூ.60 கோடி ஒதுக்கீடு
By DIN | Published On : 09th June 2019 12:57 AM | Last Updated : 09th June 2019 12:57 AM | அ+அ அ- |

ஒரத்தூர்-ஆரம்பாக்கம் ஏரிகளை இணைத்து புதிய நீர்த்தேக்கத் திட்டத்திற்கு கூடுதலாக தமிழக அரசு ரூ. 60 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் கே.சத்தியகோபால் தெரிவித்தார்.
கடந்த 2015-ஆம் ஆண்டில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சென்னையின் புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், கூடுவாஞ்சேரி, ஆதனூர், வரதராஜபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் நீரில் மிதந்து பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகினர்.
இதைத் தொடர்ந்து தமிழக அரசு பேரிடர் மேலாண்மைப் பணிகளுக்காக ரூ.84.70 கோடி ஒதுக்கீடு செய்தது. இதில் ஏரிகளை ஆழப்படுத்தல், வெள்ள உபரிநீர் செல்ல கால்வாய், பூமிக்கடியில் செல்லும் வகையில் பாதாளக் கால்வாய் அமைத்தல், ஏரிகளில் கரைகளை பலப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணி இதுவரை 80 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் கே.சத்தியகோபால், காஞ்சி மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் சத்தியகோபால் கூறியது:
ஒரத்தூர் - ஆரம்பாக்கம் ஏரிகளை இணைத்து புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது தமிழக அரசு இதற்காக கூடுதலாக ரூ.60 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
இதன் மூலம் இந்தப் பகுதிகளில் பெரிய நீர்த்தேக்கம் உருவாகி 0.75 டிஎம்சி நீர் தேக்கப்பட்டு, விவசாயம் மற்றும் குடிநீருக்கு பயன்படுத்த முடியும் என்றார் அவர்.
இந்த ஆய்வில், மாவட்ட வருவாய் அலுவலர் என்.சந்திரமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் ஸ்ரீதர், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் தியாகராஜன், உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.