காஞ்சிபுரத்தில் திடீர் மழை
By DIN | Published On : 14th June 2019 04:20 AM | Last Updated : 14th June 2019 04:20 AM | அ+அ அ- |

சுட்டெரிக்கும் வெயிலுக்கு இடையே வியாழக்கிழமை பெய்த மழை காஞ்சிபுரம் நகரைக் குளிர்வித்தது.
காஞ்சிபுரத்தில் கடந்த 5 மாதங்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. இதனால், காலை 11 மணியிலிருந்து 3 மணிவரை பொதுமக்கள் வெளியில் செல்வதைத் தவிர்த்து வருகின்றனர். குறிப்பாக, சுற்றுலாப் பயணிகளும் தங்களது விடுதியிலேயே முடங்குகின்றனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை மாலை 3.50-க்கு திடீரென கருமேகங்கள் சூழ்ந்து, பலத்த காற்று வீசியது. சரியாக 4 மணிக்கு ரங்கசாமிகுளம், விளக்கொளி கோயில் தெரு, ஜெம் நகர், செவிலிமேடு, காவலான் கேட், மூங்கில் மண்டபம், காந்திசாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. சிறிது நேரம் மட்டுமே பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் தேங்கி நகரைக் குளிர்வித்தது.
பெரிய காஞ்சிபுரத்தில் மழை இல்லை: பெரிய காஞ்சிபுரம் பகுதிகளான பிள்ளையார் பாளையம், ஒலிமுகமதுபேட்டை, சாலைத் தெரு, கீழம்பி, சிறுகாவேரிப்பாக்கம், பொன்னேரிக்கரை ஆகிய பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்தும் மழை பெய்யாததால் அப்பகுதி மக்கள் ஏமாற்றமடைந்தனர்.