வேட்பாளர்களின் செலவு விவரங்கள் கண்காணிக்கப்படும்: ஆட்சியர்
By DIN | Published On : 22nd March 2019 04:04 AM | Last Updated : 22nd March 2019 04:04 AM | அ+அ அ- |

ஊடகக் கண்காணிப்புக் குழு மையத்தின் மூலம் வேட்பாளர்களின் செலவு விவரங்கள் கண்காணிக்கப்படும் என்று ஆட்சியர் பா.பொன்னையா வியாழக்கிழமை கூறினார்.
மக்களவைத் தேர்தலையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊடகக் கண்காணிப்புக் குழு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் பா.பொன்னையா கூறியது: மக்களவைத் தேர்தலையொட்டி பல்வேறு தேர்தல் விழிப்புணர்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்களின் விளம்பரங்கள் கண்காணிக்கப்படும். இதற்கென, ஊடகக் கண்காணிப்புக் குழு மையம் ஆட்சியர் அலுவலக வளாகத்தின் மூன்றாவது தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்துக்கு, மாவட்ட ஆட்சியர் தலைவராகவும், சார்-ஆட்சியர், மூத்த பத்திரிகையாளர்கள், செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் ஆகியோர் உறுப்பினர்களாகவும் செயல்படுவார்கள். இதன்மூலம், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்களின் விளம்பரங்கள், தெருமுனைப் பிரசாரங்கள் உள்பட வேட்பாளர்களுடைய செலவுக் கணக்கு விவரங்கள் கண்காணிக்கப்படும். அத்துடன், அச்சடிக்கப்படும் பேனர்கள், துண்டுப் பிரசுரங்களில் தேர்தல் விதிகளின்படி அச்சகதாரரின் முழு முகவரியும் அச்சிடப்பட்டுள்ளதா என்பதும் கண்காணிக்கப்படவுள்ளது என்றார் அவர்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஸ்ரீதர், நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு ) ஆதிலஷ்மி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...