கண்ணாடி தொழிற்சாலை ஊழியர்கள் 3-ஆவது நாளாக வேலைநிறுத்தம்
By DIN | Published On : 28th March 2019 04:05 AM | Last Updated : 28th March 2019 04:05 AM | அ+அ அ- |

ஸ்ரீபெரும்புதூர் அருகே வாகனங்களுக்கு கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலை ஊழியர்கள் 3-ஆவது நாளாக புதன்கிழமை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டுக்கோட்டை சிப்காட் வளாகத்தில் கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு கண்ணாடி தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 239 நிரந்தர ஊழியர்களும், 1,500-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணி செய்கின்றனர்.
இந்நிலையில், தொழிற்சங்கம் தொடங்கியதாக 28 தொழிலாளர்களை தொழிற்சாலை நிர்வாகம் பணிநீக்கம் செய்தது.
இதைத் தொடர்ந்து, தொழிலாளர்கள் பணி நீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, தொழிற்சாலை வளாகத்தின் அருகில் கடந்த திங்கள்கிழமை முதல் சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கண்ணன் தலைமையில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதன்கிழமை மூன்றாவது நாளாக நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில், சிஐடியு மாநிலத் தலைவர் அ.செளந்தரராஜன், மாவட்டத் தலைவர் எஸ்.கண்ணன், மாவட்டச் செயலர் இ.முத்துக்குமார், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் இ.சங்கர், ஸ்ரீபெரும்புதூர் பகுதி செயலர் பி.ரமேஷ், தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பகுதி செயலர் டி.லிங்கநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...