முதல்வரை வரவேற்ற வெளிநாட்டினர்
By DIN | Published On : 28th March 2019 04:07 AM | Last Updated : 28th March 2019 04:07 AM | அ+அ அ- |

தேர்தல் பிரசாரத்துக்காக புதன்கிழமை மாமல்லபுரம் வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
காஞ்சிபுரம் (தனி) மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல், திருப்போரூர் சட்டப்பேரவை இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் எஸ்.ஆறுமுகம் ஆகியோரை ஆதரித்துப் பேச முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை மாமல்லபுரம் வந்தபோது, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜூலியானா என்ற பெண் தமிழ் நாட்டுப் பெண் போல் சேலை உடுத்தி ஆரத்தி எடுத்து முதல்வரை வரவேற்றார். அவருடன் வந்திருந்த ஆண்கள் வேட்டி உடுத்திக் கொண்டு இரட்டை இலைச் சின்னத்தை கையில் பிடித்தபடி முதல்வரை வரவேற்றனர். அப்போது, வெளிநாட்டினரின் வரவேற்புக்கு முதல்வர் நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து, ஜூலியானா செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் நடக்கும் தேர்தல் பிரசாரம் வித்தியாசமானதாக இருக்கிறது. முதல்வரை வரவேற்றதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து முதல்வருக்கு வரவேற்பு அளிக்கின்றனர். இதைப்பார்த்து நானும் தமிழ்ப் பெண்போல் சேலை அணிந்து ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தேன் என்றார். இதைக்கண்ட அதிமுகவினர் பலரும் வெளிநாட்டினருடன் இணைந்து சுய படம் எடுத்துக்கொண்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...