கத்திரி வெயில் தொடங்கியதை அடுத்து நகரின் பல்வேறு சாலைகள் சனிக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டன.
தமிழகத்தில் சனிக்கிழமை கத்திரி வெயில் தொடங்கியுள்ளது. தொடர்ந்து, மே 29-ஆம் தேதி வரை கத்திரி வெயில் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரத்தில் கடந்த ஜனவரி மாதத் தொடக்கத்திலிருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது.
குறிப்பாக, நண்பகல் வேளையில் பொதுமக்கள் வெளியில் வருவதைத் தவிர்த்து வந்தனர். கடந்த 4 நாள்களாக அனல் காற்று வீசி வந்த நிலையில், கத்திரி வெயில் தொடங்கியதால் காலை 11.30 மணி முதல் மாலை 4 மணி வரை வெப்பம் தகித்தது. பொதுமக்கள் குளிர்ச்சியான பழங்கள், காய்கறிகளை உண்டு உடல் வெப்பத்தை தணித்து வருகின்றனர்.
வெறிச்சோடிய சாலைகள்:
விடுமுறை நாள்களில் காந்தி சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பட்டுச் சேலை வாங்க வரும் வாடிக்கையாளர்கள், சுற்றுலாப் பயணிகள் என நடமாட்டம் அதிகமாக இருக்கும். ஆனால், தற்போது நகரின் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடின.
26 நாள்களுக்கு கத்திரி..: வங்கக் கடலில் உருவான பானி புயல் ஒடிஸா மாநிலத்தில் கரையைக் கடந்தாலும், இப்புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் மேகமூட்டம் காணப்பட்டது. ஆனால், புழுக்கமும், அனல்காற்றும் குறைந்தபாடில்லை. இப்புயலால் மழை வரும் என்றும், வெயிலின் தாக்கம் குறையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், வெயில் நூறு டிகிரிக்கும் மேலாகவே இருந்து வருகிறது. அடுத்த 26 நாள்களுக்கு அனல் காற்றோடு வெயிலின் தாக்கமும் அதிகரிக்கலாம் என வானிலை ஆய்வு மைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.