கழிவு நீரில் கலந்து வீணாகும் குடிநீர்
By DIN | Published On : 05th May 2019 12:34 AM | Last Updated : 05th May 2019 12:34 AM | அ+அ அ- |

ஸ்ரீபெரும்புதூர் அருகே செங்காடு ஊராட்சியில் குடிநீர்க் குழாய்களை முறையாக பராமரிக்காததால், குடிநீர் கசிந்து கழிவுநீர் கால்வாயில் கலந்து வீணாகி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
செங்காடு ஊராட்சியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பாக மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு, குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதுவரை, காலையும் மாலையும் சுமார் 2 மணி நேரம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. சிலர் குடிநீர்க் குழாய்களை உடைத்து தண்ணீர் பிடித்தனர். உடைந்த குழாய்களை ஊராட்சி நிர்வாகம் சீரமைக்காததால் குடிநீர் தினமும் வீணாக வெளியேறி கழிவுநீர்க் கால்வாயில் கலந்து வருகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியது:
செங்காடு பகுதியில் குடிநீர் ஆதாரம் அதிக அளவில் உள்ளதால் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பாக போதுமான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதை மீறி சிலர் தங்களது வீடுகளுக்கு அருகில் உள்ள குழாய்களை உடைத்து தண்ணீர் பிடித்து வருகின்றனர். இதனால் குழாய்களை மூடமுடியாததால் குடிநீர் வீணாகி வருகிறது. எனவே குடிநீர்க் குழாய்களை உடைத்தவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். பின்னர் ஊராட்சி நிர்வாகத்தினர் குழாய்களைப் பராமரித்து குடிநீர் வீணாவதைத் தடுக்க வேண்டும் என்றனர்.