கொள்ளை போன ரூ.12 கோடி நகைகளில் 75% பறிமுதல்: ஆய்வுக்குப் பின் எஸ்.பி. தகவல்
By DIN | Published On : 05th May 2019 12:10 AM | Last Updated : 05th May 2019 12:10 AM | அ+அ அ- |

பரனூர் சுங்கச்சாவடி அருகே கொள்ளையடிக்கப்பட்ட ரூ.12 கோடி மதிப்புள்ள நகைகளில் 75 சதவீத நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி சனிக்கிழமை தெரிவித்தார்.
நகைக்கடை உரிமையாளர் கிரண்ராவுக்கு சொந்தமான ரூ.12 கோடி மதிப்பிலான தங்க, வைர, வைடூரிய நகைகளுடன், நகைக்கடை மேலாளர் தயாநிதி சுவைன் மற்றும் ஊழியர்கள் 4 பேர் காரில் கடந்த திங்கள்கிழமை (ஏப். 29) அதிகாலை சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர்.
செங்கல்பட்டு வட்டம், பரனூர் சுங்கச்சாவடி அருகே காரை வழிமறித்த 5 பேர் கொண்ட கும்பல், தங்களை போலீஸார் என்று கூறிக்கொண்டு வாகனத்தை சோதனையிட்டனர்.
அப்போது, ரூ.12 கோடி மதிப்பிலான நகைகளையும், அவர்களிடம் இருந்த ரூ.7.50 லட்சம் ரொக்கத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுகுறித்து நகைக்கடை மேலாளர் தயாநிதி சுவைன் செங்கல்பட்டு கிராமிய காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கில் வடக்கு மண்டல காவல் துறைத் தலைவர் நாகராஜன் உத்தரவின்பேரில், காஞ்சிபுரம் மாவட்ட காவல் துணைத் தலைவர் தேன்மொழி ஆலோசனையின்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி மேற்பார்வையில், செங்கல்பட்டு டிஎஸ்பி கந்தன், ஆய்வாளர்கள் இளங்கோவன், அந்தோணி ஸ்டாலின், பாலசுப்ரமணியன், பாண்டியன் உள்ளிட்ட 5 தனிப்படை போலீஸார் கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், பரனூர் சுங்கச்சாவடியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, கொள்ளையில் ஈடுபட்ட முகமது அப்பாஸ் படத்தை போலீஸார் வெளியிட்டனர். இதைத் தொடர்ந்து, அப்பாஸ் உள்பட 4 பேரை வெள்ளிக்கிழமை கைது செய்து, அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த நகைகளை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுக்குப் பின், அவர்களிடம் இருந்து 75 சதவீத நகைகள் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது:
ரூ.12 கோடி நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், சென்னை-எண்ணூர் அன்னை சிவகாமி நகர் 3-ஆவது தெருவைச் சேர்ந்த ரமேஷ் (33), ராஜேந்திரன் (32), மணிகண்டன் (29), சென்னை-எருக்கஞ்சேரி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த முகமது அப்பாஸ் (எ) பாபு (27) ஆகிய 4 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கார், இருசக்கர வாகனம் மற்றும் ரூ. 7 கோடியே 60 லட்சத்து 8,830 மதிப்புள்ள நகைகளை பறிமுதல் செய்துள்ளோம்.
கைது செய்யப்பட்டவர்கள் சனிக்கிழமை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். மீதமுள்ள குற்றவாளிகளையும், நகைகளையும் கண்டு பிடிக்க வேண்டும்.
மேலும், இதில் யார், யார் இன்னும் சம்பந்தப்பட்டுள்ளனர், இதற்கு முன்னதாக இவர்கள் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனரா, இவர்களின் பின்னணியில் செயல்படுபவர்கள் யார் என்பது குறித்த முழு விவரங்களும் பின்னர் தெரியவரும் என்றார் அவர்.