சாலை நடுவே வளர்ந்துள்ள கருவேல மரங்கள்
By DIN | Published On : 05th May 2019 12:10 AM | Last Updated : 05th May 2019 12:10 AM | அ+அ அ- |

ஒரகடம்- ஸ்ரீபெரும்புதூர் சாலையின் நடுவே வளர்ந்துள்ள கருவேல மரங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதுடன், அதன் முட்கள் உடம்பில் தைப்பதால் மோட்டார் சைக்கிளில் செல்வோர் பெரிதும் பாதிக்கப்படுவதாக வாகன ஓட்டுநர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து வாகன ஓட்டுநர்கள் கூறியது:
ஒரகடம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா தொடங்கப்பட்டதையடுத்து, நூற்றுக் கணக்கான தொழிற்சாலைகள் இப்பகுதியில் இயங்கி வருகின்றன. இத்தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருள்கள் கொண்டு வரவும், உற்பத்தி செய்யப்படும் பொருள்களை கொண்டு செல்லவும் அதிக அளவில் கனரக வாகனங்கள் வந்து செல்வதால் ஒரகடம் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.
இதையடுத்து, ஒரகடம் பகுதி சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையுடனும், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடனும் இணைக்கப்பட்டது. தற்போது, வண்டலூர்- வாலாஜாபாத் இரு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாகவும், சிங்கப்பெருமாள் கோவில்-ஒரகடம்-ஸ்ரீபெரும்புதூர் சாலையை ஆறுவழிச்சாலையாகவும் தரம் உயர்த்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஒரகடம்- ஸ்ரீபெரும்புதூர் சாலையில் பராமரிப்பு பணிகள் நடைபெறாததால், தற்போது சாலை நடுவே தடுப்புகளில் வளர்ந்துள்ள கருவேல மரங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதுடன், அதன் முட்கள் உடம்பில் தைப்பதால் மோட்டார் சைக்கிளில் செல்வோர் சட்டை கிழிந்தும், ரத்த காயங்கள் ஏற்பட்டும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சாலை தடுப்புகளில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...