காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் அதிகாரப்பூர்வமற்ற வாகன நிறுத்தம்
By DIN | Published On : 15th May 2019 04:06 AM | Last Updated : 15th May 2019 04:07 AM | அ+அ அ- |

காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் உள்ள அறிவிப்பை மீறி பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை நிறுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
கோயில்களின் நகரமாகவும், பட்டுச் சேலைகளுக்கான விற்பனை மையமாகவும் விளங்கும் காஞ்சிபுரத்துக்கு நாள்தோறும் பேருந்து, ரயில்கள் மூலம் திரளானோர் வந்து செல்கின்றனர். அதேபோல், காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்குச் செல்வோர் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர்.
அவ்வாறு சென்று வருவோர் காஞ்சிபுரம் நகர்ப் பகுதியிலிருந்து இருசக்கர வாகனங்கள் மூலம் புதிய, பழைய ரயில் நிலையங்களுக்கு வருகின்றனர். அவர்கள் தங்கள் வாகனங்களை வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி விட்டு செல்வர்.
எனினும், அலுவலகம் செல்வோர், வழிஅனுப்ப வருவோர் போன்ற பலரும் வாகன நிறுத்தத்தில் தங்கள் வாகனங்களை நிறுத்தாமல், ரயில் நிலையத்துக்கு முன் அவற்றை நிறுத்தி விட்டு செல்கின்றனர்.
இவ்வாறு நிறுத்தக் கூடாது என ரயில்வே நிர்வாகம் அறிவிப்புப் பலகையும், தடுப்புகளையும் வைத்துள்ளது.
எனினும், அறிவிப்பை மீறி சிலர் தங்கள் வாகனங்களை பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், ரயில் நிலைய முகப்பிலேயே நிறுத்தி விட்டுச் செல்கின்றனர்.
அவர்கள் மீது ரயில் நிலைய நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே, விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.