மழைநீர் தேங்கிய இடத்தில் தூர்வாரிய நகராட்சி
By DIN | Published On : 15th May 2019 04:08 AM | Last Updated : 15th May 2019 04:10 AM | அ+அ அ- |

நகரில் மழைநீர் தேங்கிய இடத்தில் நகராட்சி நிர்வாகம் தூர் வாரி நடவடிக்கை எடுத்துள்ளது.
காஞ்சிபுரத்தில் பல்வேறு பிரசித்தி பெற்ற கோயில் குளங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றான ரங்கசாமிக் குளத்துக்கு மழைக்காலங்களில் வரும் நீரின் அளவை வைத்து இப்பகுதியினர் நிலத்தடி நீரின் அளவைத் தெரிந்துகொள்வர். ஆனால், அண்மைக்காலமாக ரங்கசாமிக் குளத்துக்கு மழைநீரும் வருவதில்லை; ஆக்கிரமிப்பும் குறைந்தபாடில்லை. இதற்கு, குளத்தைச் சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் விளக்கொளிக் கோயில் தெருவின் இருபுறமும் செல்லும் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்புகளும் காரணமாக உள்ளன.
இந்நிலையில், கடந்த 7-ஆம் தேதி பெய்த கனமழையால் இரட்டைக் கால்வாய் வழியாக மழைநீர் ரங்கசாமிக் குளத்துக்கு செல்லவில்லை. மாறாக, விளக்கொளிக் கோயில் தெருவை அடுத்த பாவாபேட்டை தெரு பகுதியில் இடுப்பளவுக்கு மழைநீர் தேங்கியது. இதனால், வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் சிரமத்துக்குள்ளாகின. இந்தப் பிரச்னை மழைக்காலங்களில் தொடந்து ஏற்படுவதாக அப்பகுதியினர் புகார் தெரிவித்து வந்தனர்.
இதுகுறித்து கடந்த 8-ஆம் தேதி விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் தேங்கும் மழைநீர், ரங்கசாமிகுளம் ஆக்கிரமிப்பு என்ற தலைப்பில் தினமணியில் செய்தி வெளியானது. இதையடுத்து, நகராட்சி ஊழியர்கள் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் தேங்கிய மணல் திட்டுகள், கால்வாய் வழியாக மழைநீர் எளிதாகச் செல்லும் வகையில் கடந்த இரு தினங்களாக தூர் வாரி நடவடிக்கை எடுத்தனர். இதனால், மழைநீர் செல்ல வழி காணப்பட்டுள்ளது. எனினும், ஆக்கிரமிப்புகள் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதுதொடர்பாக, நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், கால்வாயைத் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள நிதிப் பற்றாக்குறை உள்ளது. எனினும், அவசரக் கால பணியாக மழைநீர் தேங்கும் இடங்களில் பராமரிப்பு, தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ஆக்கிரமிப்புகள் தொடர்பாக ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.