முன்பருவக் கல்வி வளர்ச்சி: அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு பயிற்சி முகாம்
By DIN | Published On : 15th May 2019 04:07 AM | Last Updated : 15th May 2019 04:07 AM | அ+அ அ- |

முன்பருவக் கல்வி வளர்ச்சி குறித்து அங்கன்வாடிப் பணியாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விப்ரோ கேர்ஸ் என்ற தனியார் நிறுவனம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீவளூர், கடுவஞ்சேரி, தத்தனூர், பேரீஞ்சம்பாக்கம் ஆகிய கிராமங்களைத் தத்தெடுத்துள்ளது. அந்த கிராமங்களில் ஹேன்ட் இன் ஹேன்ட் தொண்டு நிறுவனத்தின் சுகாதாரத் திட்டத்தின் மூலம் தாய்மார்களுக்கான சுகாதாரப் பயிற்சிகளை அளித்து வருகிறது. மேலும், அங்கன்வாடி சேவைகளை மேம்படுத்துதல், மருத்துவ முகாம்களை நடத்துவதிலும் அகியவற்றிலும் ஈடுபட்டு வருகிறது.
தனது சேவைகளில் ஒரு பகுதியாக அங்கன்வாடிப் பணியாளர்களுக்கான முன்பருவக் கல்வி மற்றும் வளர்ச்சி குறித்த ஒரு நாள் பயிற்சி முகாமை நடத்த இந்த நிறுவனம் திட்டமிட்டது.
அதன்படி ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகத்தில் ஒரு நாள் பயிற்சி முகாமை செவ்வாய்கிழமை நடத்தியது.
குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மேற்பார்வையாளர் கோதைநாயகி தலைமையில் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமிற்கு அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் வட்டார வளப் பயிற்றுனர் சுசித்ரா முன்னிலை வகித்தார்.
இதில் ஹேன்ட் இன் ஹேன்ட் தொண்டு நிறுவனத்தின் சுகாதாரத் திட்ட முதுநிலை மேலாளர் ஜெபஸ்டின், திட்ட மேலாளர் ராஜசேகரன் ஆகியோர் பங்கேற்று, அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகளுக்கு பேச்சு, பாடல், கதை, விளையாட்டு, குழந்தைகளின் அறிவு வளர்ச்சி, உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி, சமூகத்துக்கு அங்கன்வாடிப் பணியாளர்கள் எவ்வாறு சேவையாற்ற வேண்டும் என்பது தொடர்பாக பயிற்சி அளித்தனர். அங்கன்வாடி அளவிலான கண்காணிப்புக் குழு மற்றும் ஆதரவுக் குழுக்கள் அமைக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த முகாமில் ஹேன்ட் இன் ஹேன்ட் அமைப்பின் ஒன்றிய மேலாளர் வினோத், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மேற்பார்வையாளர்கள் அமுல்மேரி, மோகனகுமாரி, பாணுமதி, சமூக ஊக்குநர் வாணிஸ்ரீ மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.