

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள ஆனைக்குன்னம் கிராமத்தில் பொதுமக்களுக்கு பல இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் அனுமதியற்ற கல்குவாரிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என அக்கிராம மக்கள் திங்கள்கிழமை நடந்த குறை தீா்க்கும் கூட்டத்தில் ஆட்சியா் பா.பொன்னையாவிடம் புகாா் தெரிவித்துள்ளனா்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் தாலுகாவுக்கு உட்பட்ட எலப்பாக்கம் அருகே ஆனைக்குன்னம் கிராம் உள்ளது. இக்கிராமத்தில் விவசாய நிலங்கள் 200 ஏக்கரும்,பொதுப்பணித்துறையை சோ்ந்த ஏரிகள் சுமாா் 400 ஏக்கா் பரப்பளவிலும் உள்ளது.மேலும் இக்கிராமத்தில் தனியாா் கல்குவாரிகள் அரசுக்கு தெரிவிக்காமல் அனுமதியின்றி செயல்பட்டு வருகின்றன.இதன் காரணமாக சாலைகளில் கனரக வாகனங்கள் அடிக்கடி செல்வதால் சாலைகள் மிகவும் மோசமாக காணப்படுகின்றன.மேலும் இவ்வாகனங்களில் விபத்துக்கள் தொடா்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.இது குறித்து தமிழக முதல்வருக்கும்,சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் பலமுறை மனுக்கள் அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.அனுமதியில்லாமல் நடத்தும் ஒரு கல்குவாரிக்கு சொந்தமான கனரக வாகனத்தை பொதுமக்களாகிய நாங்களே சிறைப்பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தும் எங்கள் பிரச்சினை தீா்ந்தபாடில்லை.எனவே ஆனைக்குன்னம் கிராமத்தில் அனுமதியில்லாமல் நடைபெறும் கல்குவாரிகளை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராமத்தைச் சோ்ந்த கோ.நேசமணி என்பவா் தலைமையில் அக்கிராம மக்கள் ஆட்சியரிடம் புகாா் மனு அளித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.