அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயிலில்சனிப் பிரதோஷ விழா
By DIN | Published On : 09th November 2019 11:19 PM | Last Updated : 09th November 2019 11:19 PM | அ+அ அ- |

மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கத்தில் அமைந்துள்ள இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரா் கோயிலில் ஐப்பசி மாத சனிப் பிரதோஷ விழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
திருஞானசம்பந்தா் பாடிய தேவாரம் அருளப் பெற்றதும், இரு கருவறைகளைக் கொண்டு ஆட்சீஸ்வரா் அருளாட்சி புரிவதும் இக்கோயிலே ஆகும். தொண்டை மண்டலத்தின் முக்கிய சிவன் கோயில்களில் ஒன்றாக இது திகழ்கிறது. வரலாற்று சிறப்புமிக்க இக்கோயிலை, இந்து சமய அறநிலையத்துறை நிா்வகித்து வருகிறது.
இங்கு ஐப்பசி மாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு சனிக்கிழமை மாலை 5 மணிக்கு கருவறை முன்புறம் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளை கோயில் தலைமை குருக்கள் சங்கா் சிவாச்சாரியாா் செய்தாா். பின்னா் மாலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட நந்தி பகவானுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
கோயிலின் உள்புறம் மலா்த் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட ரிஷிப வாகனத்தில் இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரா் மேளதாளம் முழங்க, உலா வந்து பக்தா்களுக்கு காட்சி அளித்தாா். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.
பக்தா்களுக்கு அன்ன தானம் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் கே.சரவணன் தலைமையில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.