காஞ்சிபுரம் நகரில் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிக்கு 250 மருத்துவர்களை உள்ளடக்கிய 30 குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பணிகள் துறை கூடுதல் இயக்குநர் ஏ.சோமசுந்தரம் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் நகரில் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாகத் தெரிய வந்ததை அடுத்து நகரில் பல்வேறு இடங்களில் சுகாதாரத் துறையினர், நகராட்சி நிர்வாகத்தினர் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை முதல் தொடர்ந்து ஒரு வாரத்துக்கு தடுப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நகராட்சிப் பணியாளர்களுக்கு கொசு மருந்து தெளிக்கும் இயந்திரம் மற்றும் நடமாடும் மருத்துவக் குழு
வாகனங்கள் ஆகியவற்றை சுகாதாரப் பணிகள் துறை கூடுதல் இயக்குநர் ஏ.சோமசுந்தரம் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் காய்ச்சல் மற்றும் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அரசு மருத்துவமனைகளில் தனிக்கவனம் செலுத்தி தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது. முக்கியமாக கொசு ஒழிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவியர் மூலமாக வீடு வீடாகச் சென்று டெங்கு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. 250 மருத்துவர்களைக் கொண்ட மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு, நகரின் பல இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைத்து தேவையான மருத்துவ ஆலோசனைகளும், மருந்துகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
காஞ்சிபுரம் நகரில் செவிலிமேடு, ஓரிக்கை, சின்னக்காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள 20 வார்டுகளில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பகுதிகளில் மொத்தம் 30 குழுக்கள் 5 பிரிவுகளாகப் பிரிந்து சென்று ஒரு வாரத்துக்கு பணியில் ஈடுபடுவர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86 பேருக்கு காய்ச்சலும், 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பும் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாதாரணக் காய்ச்சலாக இருந்தாலும் பாதிக்கப்பபட்டவர்களுக்கு ஓஆர்எஸ் கரைசல், நிலவேம்புக் குடிநீர் வழங்கப்படுகின்றன என்றார் அவர். சுகாதாரப் பணிகள் துறை துணை இயக்குநர்கள் தி.செந்தில்குமார்,வி.கே.பழனி, நகராட்சிப் பொறியாளர் கா.மகேந்திரன், சுகாதார அலுவலர் முத்து, சுகாதார ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.