பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்: ஒருவர் கைது
By DIN | Published On : 11th September 2019 04:26 AM | Last Updated : 11th September 2019 04:26 AM | அ+அ அ- |

மதுராந்தகம் அடுத்த முதுகரை கிராமத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநரை தாக்கிய 3 பேரை கைது செய்யக்கோரி அரசு பேருந்துகளை இயக்காமல் ஊழியர்கள் திங்கள்கிழமை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்யூரில் இருந்து மதுராந்தகம் நோக்கி திங்கள்கிழமை அரசு நகரப் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. முதுகரை கிராமம் அருகே வரும்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்களுக்கும் பேருந்து ஓட்டுநருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியநிலையில், ஓட்டுநர் அரசன், நடத்துநர் பாலாஜி ஆகிய 2 பேரையும் அவர்கள் தாக்கினார்கள்.
இதில் இருவரும் காயமடைந்தனர். தாக்கிய மூவரும் தப்பி விட்டனர். காயமடைந்தவர்களை பயணிகள் மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இத்தகவல் அறிந்த மதுராந்தகம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையைச் சேர்ந்த ஊழியர்கள் 20க்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, மதுராந்தகம் போலீஸார் முதுகரையைச் சேர்ந்த பரத் (23) என்பவரை கைது செய்தனர். மற்ற 2 பேரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் உறுதி அளித்ததையடுத்து மீண்டும் பேருந்துகளை ஊழியர்கள் இயக்கினர். இதனால் சுமார் 1மமணி நேரம் பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.